'கொரோனா' பாதிப்பிலும் 'இனப் பாகுபாடு...' 'அமெரிக்காவில்' நிகழ்ந்து வரும் 'அவலம்'... 'தோலுரித்துக்' காட்டு 'நியூயார்க் டைம்ஸ்' கட்டுரை...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் வெள்ளையின அமெரிக்கர்களின் இறப்பு விகிதத்தை விட கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானிக் மக்களின் இறப்பு விகிதம் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலை புள்ளி விவரங்களுடன் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் மொழி பேசும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் ஹிஸ்பானிக்குகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களும் அமெரிக்க கறுப்பினத்தவர்களும் வறுமையிலும், மோசமான சுகாதார நிலையிலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். உரிய சுகாதார பாதுகாப்பு இல்லாமல் வாழும் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுவதால் அவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

நியூயார்க் நகரில் மட்டும் 34 சதவீத ஹிஸ்பானிக் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதேபோல் நியூயார்க்கில் 22 சதவீதம் கறுப்பினத்தவர்கள் வாழும் நிலையில், கொரோனா தொற்று காரணமாக 28 சதவீதம் பேர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சிகாகோவில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் கறுப்பினத்தவர்கள். இத்தனைக்கும் அந்நகரின் மக்கள்தொகையில் கறுப்பினத்தவர்கள் மூன்றில் ஒரு பங்குதான்.

மிச்சிகன் மக்கள்தொகையில், கறுப்பினத்தவர்கள் 14 சதவீதம் என்றாலும், ‘கோவிட்-19’ பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. பாஸ்டனில் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆரம்ப சுகாதார மருத்துவப் பணியாளர்களை அணுகும் வாய்ப்பு, இம்மக்களுக்குக் குறைவு என்பதால், இவர்களுக்கு மருத்துவச் சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குயின்ஸ் போன்ற இடங்களில், இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவ நிதி திரட்ட முடியாமல் சமூக அமைப்புகள் திணறுகின்றன. நியூயார்க்கில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள், வேலையிழந்தவர்கள் அல்லது இரண்டுக்கும் ஆளான எண்ணற்ற தொழிலாளர்கள் உணவு கோரி அழைக்கிறார்கள்.

நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானிக் குடும்பங்களைப் பொறுத்தவரை பல தலைமுறைகளுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, பொருளாதார ரீதியிலான சிரமங்களின் விளிம்பு நிலையில் வசித்துவரும் இம்மக்களை அது படுகுழியில் தள்ளிவிட்டது.

மாநில அரசுகளும் நகர நிர்வாகங்களும் இப்போதாவது, உரிய நடவடிக்கைகளை எடுத்தால், விளிம்புநிலையில் இருக்கும் மக்களைக் காப்பாற்றிவிடலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்