'குண்டாக இருப்பது மட்டுமே தகுதி!.. ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,300 சம்பாதிக்கலாம்!'.. பருமனான நபர்களை... வாடகைக்கு விடும் விநோத பிசினஸ்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பருமனான உடல் கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் வினோத நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது ஒன்றும் ஜப்பானியர்களுக்கு புதிது இல்லை. தங்களை மோசடி செய்யும் இணையின் காதலரை மனம் மாற்றி அவர்களின் காதலை கைவிடச் செய்வதற்காகவும், நிறுவனங்களுக்காக நடுத்தர வயதுடையோரையும் வாடகைக்கு எடுத்து திகைக்க வைத்த ஜப்பானியர்கள், தற்போது அதிக எடை கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் தொழிலைத் தொடங்கி மிரள வைத்திருக்கின்றனர்.

"Debucari" என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனம், இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் எனவும் கூறுகிறது. (2000 ஜப்பானிய யென்கள் = ரூ. 1,300)

"Debucari" என்ற இந்நிறுவனத்தை Mr. Bliss என்ற நபர் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பிளஸ் சைஸ் நபர்களுக்கான ஆடை நிறுவனமான Qzilla-வை 2017ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

இந்த விநோத சேவை குறித்து Mr. Bliss கூறுகையில், "பருமனான மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களை விட குண்டான மனிதரை பார்த்து உங்களை நீங்களே நன்றாக உணருவதற்கோ, எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ, அல்லது இன்னபிற காரணங்களுக்காகவோ உங்களுக்கு பருமனான நபர்கள் தேவை எனும் போது எங்களை அணுகி சேவையைப் பெறலாம்" என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார்.

மேலும், Debucari-ன் விளம்பரங்களில் எந்த இடத்திலும் பருமனான நபர்களை அநாகரிகமாகவோ, அவமதிக்கும் வகையிலோ குறிப்பிடவில்லை என்றும், இதனை பாசிட்டிவாகவும், பருமனான நபர்களை அதிகாரப்படுத்தும் வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் Mr. Bliss கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் வாடகைக்கு எடுக்கப்படும் நபருக்கே அளிக்கப்படும் எனவும், கார்பரேட்களிடமிருந்து கமிஷனாக பெறப்படும் தொகையை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் எனவும் Mr. Bliss தெரிவித்துள்ளார்.

Debucari நிறுவனத்திடம் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்யோ, ஒசாகா மற்றும் அய்சி போன்ற நகர்களில் உள்ள பருமனான நபர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்