'தூண்டிலில் பிடித்த மீனை'... 'டக்கென வாயில் கவ்விக்கொண்ட இளைஞர்'... சற்றும் எதிர்பாராமல் நடந்த 'அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சில நேரங்களில் நம் கற்பனைக்கு எட்ட முடியாத சம்பவங்கள் கூட, உலகின் எங்காவது ஒரு மூலையில் நிகழும். அந்த வகையில், நம் கற்பனைக்கு எட்டாத நிகழ்வு ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது. அதுகுறித்த செய்தித் தொகுப்பு தான் இது.

கொலம்பியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுமார் 7 இன்ச் மீன் ஒன்றை மனிதர் ஒருவரின் தொண்டையில் இருந்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

நோயாளியான அந்த 24 வயது இளைஞர், பிவிஜய் (Pivijay) என்னும் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சி நிகழ்வு அரங்கேறியுள்ளது. அப்போது முதல் மீன் ஒன்றை பிடித்த இளைஞர், அதனை கைகளில் வைத்துக் கொண்டே, தூண்டிலை வீசிய போது இரண்டாவதாக மீன் ஒன்றும் சிக்கியுள்ளது.

இதனால் இரண்டையும் தக்க வைக்க இளைஞர் சிரமப்பட்ட நிலையில், கையில் இருக்கும் மீனையும், புதியதாக சிக்கிக் கொண்ட மீன் என இரண்டையும் தவறவிட அவருக்கு விருப்பமில்லை. இதனால், தனது கையில் இருந்த மீனை அவர் தனது வாயில் வைத்து விட்டு, தூண்டிலை சரி செய்து இரண்டாவது மீனை தூக்கப் பார்த்துள்ளார். ஆனால், அங்கு அவர் நினைத்தது நடைபெறவில்லை.

மாறாக, அவரின் வாயில் இருந்த முதல் மீன், விடுபட்டுக் கொள்ள வேண்டி, வாயிலிருந்து விரைவாக நகர்ந்த நிலையில் நேராக அவரது தொண்டைக்குள் இருந்த உணவுக் குழாய்க்குள் சிக்கியுள்ளது. எதிர்பாராத செயலால், அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்த நிலையில், யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே மருத்துவமனை சென்றுள்ளார்.

மீன் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அவரது பிரச்சனையை மருத்துவர்களிடம் எடுத்துக் கூற கூட அவரால் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, வேகமாக அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்த நிலையில், அதன் பின் மீனை தொண்டையில் இருந்து மருத்துவர்கள் அகற்றவும் செய்தனர். அந்த இளைஞரின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த மீனை மருத்துவர்கள் வெளியே எடுக்கும் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இரண்டு தினங்களுக்கு மேல் அந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்