'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் ஷி ஜெங்லியாக, தற்போது போட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா என்ற வார்த்தை எவ்வளவு பிரபலமோ, அந்த அளவிற்கு வவ்வால் பெண் திடீரென மர்மமானதும் உலகளவில் பேசு பொருளானது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது இந்த வினாடி வரையில் மர்மமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்பு அவர் யார், அவருக்கு எதனால் இந்த பெயர் வந்தது என்பது குறித்துத் தெரிந்து கொள்வது முக்கியம்.

சீனாவின் ஜிக்ஜியா கவுண்டி மாகாணத்தில் பிறந்த இவர், வுகான் பல்கலைக்கழகத்தில் பரம்பரை உயிரியலில் பட்டம் முடித்து, உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் பிரான்சில் உள்ள மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வவ்வால் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர், வவ்வால்கள்தான் சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் வகைகளின் உறைவிடம் என்பதை இவரும், இவரது குழுவினரும்தான் கண்டுபிடித்து உலகத்துக்குச் சொன்னார்கள்.

இதையடுத்து பேட் உமன் என்ற செல்ல பெயருடன் பலரும் இவரை அழைத்தார்கள். இதற்கிடையே வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் தான் கொரோனா செயற்கையாக உருவாக்கப்பட்டது என, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர்கள் குறிப்பிடும்  வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர் தான் இந்த வவ்வால் பெண்.

இதனிடையே கடந்த டிசம்பர் 1ம் தேதி, கொரோனா வைரஸ் வுகான் நகரில் முதன்முதலாகத் தென்பட்டதாக உலகத்துக்குத் தெரிய வந்தபோதே, இந்த வவ்வால் பெண் காணாமல் போய்விட்டார். அவர் குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், அவர் கொரோனா வைரஸ் பற்றிய மர்ம தகவல்கள் மற்றும் ரகசியங்களுடன் மேற்கத்திய நாடு ஒன்றுக்குத் தாவி விட்டார் எனப் பேசப்பட்டது.

இந்நிலையில்  ‘வீசாட்’ என்ற சமூக ஊடகத்தின் வழியே தற்போது மறுப்பு தெரிவித்துப் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில், '' நானும் எனது குடும்பமும் நன்றாக உள்ளோம். நாட்டை விட்டுச் செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அது ஒரு போதும் நடக்காது.. நாங்கள் தவறாக எதையுமே செய்து விடவில்லை.

கொரோனா வைரஸ் என்பது சுகாதாரமற்ற வகையில் வாழ்ந்து வந்த மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த தண்டனை. நான் சத்தியமாகச் சொல்கிறேன், இந்த வைரசுக்கும் எங்களது உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என அந்த பதிவில் கூறியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடங்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும், கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்துதான் வெளி உலகத்துக்கு வந்தது எனக் கூறி வரும் நிலையில் வவ்வால் பெண் ஷி ஜெங்லியின் பதிவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதனிடையே இந்த பதிவை உண்மையிலேயே ஷி ஜெங்லி தான் போட்டாரா, என்பது பெரும் மர்மமாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஷி ஜெங்லி வெளியே வந்து என்ன நடந்தது எனக் கூறினால் மட்டுமே, இதற்கான விடை உலகத்திற்குத் தெரியும் என்பதே நிதர்சனமான உண்மை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்