'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நகரமான வுஹானில், படிப்படியாக பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. வுஹானிலிருந்து பரவிய வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மற்ற நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில், கொரோனாவின் தொடக்கப்புள்ளியான வுஹான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கொரோனாவை தடுக்க ஜனவரி மாதத்தில் வுஹானில் மிகக் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தீவிர முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயல்பு நிலை திரும்புவது மட்டுமல்லாமல், வுஹானில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் சுற்றுலா பயணம் இன்னும் நினைத்து பார்க்க முடியாத தூரத்தில் உள்ளபோது, ஹோட்டல்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், வாகன நெரிசல் மிகுந்த சாலைகள் என அங்கு தற்போதுள்ள நிலை கடந்த ஜனவரி மாதத்தில் வுஹானிலேயே கூட நினைத்துப் பார்க்க முடியாததாகும். தற்போது வுஹானின் புகழ்பெற்ற மஞ்சள் கிரேன் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதும், அங்கு போட்டோ, செல்ஃபி எடுத்துக்கொள்வதும் அதிகரித்துள்ள போதும், அங்கு எல்லாமே முழுவதுமாக இயல்புநிலைக்கு திரும்பிவிடவில்லை எனவும், இன்னும் பல தொழில்கள் முடங்கியே இருப்பதால் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வுஹானில் கொரோனா பரவத் தொடங்கிய கடல் உணவு மார்கெட் முன்னர் அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. அந்த மார்கெட் தற்போது இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் கூட்டமின்றி காணப்படுவதால் சில வியாபாரிகள் மட்டுமே கடையை திறந்துள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் தொடக்கப்புள்ளியான வுஹானில் இயல்பு நிலை திரும்பி வருவது, மறுபுறம் பாதிப்பை கட்டுப்படுத்த போராடி வரும் மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்