'அனைத்து' கொரோனா நோயாளிகளும் 'குணமடைந்தனர்'... பெய்ஜிங் 'சிறப்பு' மருத்துவமனையை மூடும் 'சீனா'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெய்ஜிங் நகரிலுள்ள சிறப்பு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்ததால் அந்த மருத்துவமனை மூடப்பட உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பெரும்பாலான உலக நாடுகளுக்கும் பரவி 2 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சீனாவில் வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியதும் அரசு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கி  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது. இதையடுத்து தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் வுஹானிலுள்ள 16 தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெய்ஜிங்கில் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த சியாடோங்சன் மருத்துவமனையும் மூடப்பட உள்ளது. 2003ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்துள்ளனர். இதனால் நாளை இந்த மருத்துவமனையை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் இதுவரை 593 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 536 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 82,836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 648 பேர் மருத்துவமனையில் உள்ளனர். 77,555 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாட்டு பயணம் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1639 பேரில் 552 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடைசி நோயாளியும் குணமடைந்ததை அடுத்து வுஹான் கொரோனா இல்லாத நகரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்