‘தயார் நிலையில் 200 விமானங்கள், 100 ரயில்கள்’.. ‘இயல்புநிலைக்கு திரும்பும் சீனாவின் வுகான் நகரம்’.. ஆனால் சில கட்டுபாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு உள்ள கடல் உணவு விற்கும் சந்தையில் பணிபுரிந்த 61 வயது முதியவர் இறப்புக்கு பின்னர்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸின் தாக்கம் என்ன என புரிந்துக்கொள்வதற்கு முன்னரே மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். கொரோனா தாக்கத்தால் சீனாவில் இதுவரை 3,333 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 2,571 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட கடுமையான கட்டுபாடுகளாலும் மக்களில் ஒத்துழைப்பாலும் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் வுகானில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 76 நாள்களுக்கு பின்னர் வுகான் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது. வுகானில் இருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்ல 200 விமானங்கள் தயாராக உள்ளன. மேலும் 100 அதிகவேக ரயில்கள் வுகானிலிருந்து மற்ற நகரங்களுக்கு செல்ல தயாராக உள்ளன. இதேபோல் சாலை போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனை வரவேற்கும் விதமாக வுகான் மக்கள் வண்ண விளக்குகளை பரவவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனாலும் சீன அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. வுகானில் இருந்து வெளியேற விரும்புவர்கள் சீன சுகாதாரத்துறையின் செயலில் தங்களின் விவரங்கள், பயணக்குறிப்புகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். மேலும் தாங்கள் உடல் நலத்துடன் இருக்கிறோம் என்பதை குறிக்கும் பச்சை நிற கார்டை காண்பித்தால் மட்டுமே நகரை விட்டு வெளியேற முடியும். நகருக்கும் தனிமனிதர்கள் உலா வருவது, தொழிற்சாலைகள் இயங்குவதில் விதிமுறைகள் என பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முடிந்தவரை வீட்டில் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு கருதி பள்ளிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. முகக்கவசம் அணிவது, உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது தொடர்ந்து வலியுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்