'ஐயோ, கையில் இருக்குற காசெல்லாம் கரையுதே'... 'அடியோடு படுத்த வருமானம்'... ஒரே ஐடியாவால் அடியோடு மாறிய வாழ்க்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா லாக்டவுனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எடுத்த அதிரடி முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் சாமானியர்களை மட்டுமே பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் ஏற்கனவே செய்துவந்த தொழில் அல்லது வேலையை விட்டு, சூழ்நிலை காரணமாக வேறொரு வேலைக்கு மாறவேண்டிய நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சிலர் மட்டும் அந்த கடினமான சூழ்நிலையையும் தங்களுக்கானதாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

                   

கனடாவில் சலூன் கடையை நடத்தி வந்த பெண் ஒருவர் கொரோனா லாக் டவுனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தனது கடையை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அவர், அங்கிருந்த கொரோனா விதிகளுக்கு ஏற்ப தன் கடையை ஸ்டுடியோவாக மாற்றி வாழ்வாதாரத்தை மீட்டுள்ளார்.

ஒன்டாரியோ பகுதியைச் சேர்ந்த  அலிக்கா ஹிட்லர், அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்பரிங் என்ற சலூன் கடையை நடத்தி வந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவியதையடுத்து அப்பகுதியிலும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நீண்ட நாட்களாக கொரோனா விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், அவரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் ஒன்டாரியோ பகுதியில் சலூன்கடைகளுக்கான கட்டுப்பாடு தொடர்ந்து வந்தது. இதனால் மாற்று வழியை தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட அலிக்கா ஹிட்லர், அங்கு ஸ்டுடியோக்களுக்கு அனுமதியளிக்கப் பட்டிருப்பதை கவனித்தார்.

உடனடியாக, தனது சலூன் கடையையையும் ஸ்டுடியோவாக மாற்றிய அவர், கொரோனா காலத்தில் அந்த ஸ்டுடியோவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும், திரைப்படங்களுக்காக ஆடிசன் மேற்கொள்ள அனுமதித்தார்.

அலிக்கா ஹிட்லரின் மாற்றுயோசனை அவரின் வாழ்வாதாரத்துக்கு உதவியாகவும் மாறியது. இது குறித்து பேசிய அலிக்கா ஹிட்லர், "கொரோனா ஊரடங்கு எங்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்தது. சலூன் கடையை மட்டும் நம்பியிருந்ததால் எங்களின் வருமானத்துக்கு வேறு வழியில்லை. ஊரடங்கு விதிமுறைகள் எங்கள் பகுதியில் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டாலும், சலூன் கடைகளுக்கான கட்டுப்பாடு தொடர்ந்தது.

இதனால் மாற்று வழியை தேர்தெடுக்க முடிவெடுத்தேன். அதன்படி, சலூனை ஸ்டுடியோவாக மாற்றி அதனை தொலைக்காட்சிகளுக்கும், திரைப்படங்கள் எடுப்பவர்களும் பயன்படுத்திக்கொள்ள வாடகைக்கு விட்டுவிட்டேன்" என்றார்.

           

தொடர்ந்து பேசிய அவர், "கொரோனா காலத்தில் சிறு, குறு தொழில்கள் மீதான கனடா அரசின் அணுகுமுறை சரியில்லை. வால்மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கிறார்கள்.

சலூன் கடை வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் எங்களைப் போன்றவர்களின் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து முடக்குகிறார்கள். இது என்னைப் போன்றவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என கனடா அரசை கடுமையாக சாடினார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்