'ஹெச்.ஐ.வி., ஜிகா' வைரசுக்கே 'டாடா' காட்டுன 'நாடு...' இன்று 'கொரோனாவிடம்' சிக்கி 'சீரழிஞ்சு' கிடக்கு... இந்த நிலையிலும் 'ஊரடங்கை' குற்றம் கூறும் 'அதிபர்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி பிரேசில் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்நிலையில் அங்கு ஒரேநாளில் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அங்கிருக்கும் அரசியல் குழப்ப நிலையே பிரேசில் இப்படியொரு மோசமான கட்டத்தில் வந்து நிற்க முக்கியக் காரணமாகும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்..

1990களில் இலவச மருத்துவம் அளித்து எச்.ஐ.வி. வைரசைக் கட்டுப்படுத்திய தேசம். 2014-ல் கொசுவால் பரவும் ஜிகா வைரசை மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி முறியடித்த நாடு. இந்த பெருமைகளுக்கு சொந்தமான தென் அமெரிக்க நாடான பிரேசில் இன்று கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடியாமல் திண்டாடி வருகிறது.

பிரேசில் அதிபரான பொல்சனாரோ, கொரோனா பரவ ஆரம்பித்தது முதற்கொண்டே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என வெளிப்படையாகத் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Luiz Henrique Mandetta கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தினார். ஆனால் அதனைக் கண்டித்த அதிபர், அமைச்சரை பதவி நீக்கம் செய்தார். கொரோனா சாதாரணமான ஒரு காய்ச்சல்தான் என வாதாடினார்.

இதனால் கொரோனா பரிசோதனைகள் பிற நாடுகளை விட குறைவாகவே செய்யப்பட்டன. அதற்குள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. மயானங்களில் நீண்ட வரிசையில சவக்குழிகள் தோண்டப்பட்டன. மற்றொருபுறம் போதிய பாதுகாப்பின்றி பல்லாயிரம் மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மேலும், மலேரியாவுக்கான ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்க புதிய சுகதாரத்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற அரசியல் குழப்பங்களால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-ம் இடத்திற்கு பிரேசில் உயர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்