VIDEO: ஆப்கானில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்.. ‘அய்யோ குண்டு இங்கயா விழுந்தது..!’ நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்காக அந்நாட்டின் தலைநகர் காபூலில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர்.

இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்துக்கு முன்பு ஐஎஸ் கோரோசான் பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 100-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதன்படி, ஐஎஸ் கோரோசான் அமைப்பு பதுங்கியிருந்த பகுதிகளை அமெரிக்க ராணுவம் ஆளில்லா ராக்கெட் மூலம் குண்டு வீசி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அமெரிக்க ராணுவம் காபூலில் இருந்து புறப்படுவதற்கு முன், 24 முதல் 36 மணி நேரத்திற்குள் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். மேலும், காபூல் விமான நிலைய பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் ஐஎஸ் கோரோசான் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் காபூலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்