பிரதமர் வருகை! ஒளியால் விழாக்கோலம் பூண்டது அயோத்தி! கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தீப உற்சவ திருவிழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Advertising
>
Advertising

உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்ட 2017 ஆம் ஆண்டில் இருந்து அம்மாநிலத்தில் தீப உற்சவ திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு ஆண்டு தோறும் அங்கு உள்ள சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அகல் விளக்குகளை ஏற்றி இந்த திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் இந்த திருவிழாவை கொண்டாட திட்டமிட்டிருந்தார் யோகி ஆதித்யநாத். அயோத்தியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டனர். சரயு ஆற்றங்கரையில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதன்மூலம், கின்னஸ் புத்தகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. மேலும், அதற்கான சான்றிதழும் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்பட்டது.

சரயு நதிக்கரைக்கு அருகில் உள்ள ராம் கி பைடியில் 22,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் 15 லட்சத்துக்கும் அதிகமான அகல்விளக்குகள் ஏற்றப்பட்டன. இதனால் அந்த பிராந்தியமே ஒளியால் நிறைந்தது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோடி பொதுமக்கள் முன்னிலையில் பேசும்போது,"ராமர் பிறந்த அயோத்தியா மாநகரில் இருந்து நாட்டு மக்களுக்கு நான் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ராமர் யாரையும் கைவிடுவதும் இல்லை. விட்டு விலகுவதும் இல்லை. ராமரின் ஆசீர்வாதத்தால் எனக்கு அவரது தரிசன வாய்ப்பு கிடைத்தது. அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

இதனையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சியில் பேசுகையில்," பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் உத்வேகத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தி தீப உற்சவ திருவிழா தொடங்கியது. உ.பி.யின் இந்த விழா நாட்டின் திருவிழாவாக மாறியது. இன்று, அது வெற்றியின் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது” என்றார்.

இந்த திருவிழாவில் 15 முதல் 18 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லேசர் கண்காட்சியும் நடைபெற்றது. அப்போது, வான வேடிக்கைகளும் நடத்தப்பட்டன.

DEEPOTSAV, GUINNESS RECORD, MODI, UP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்