"அடிபணியுமா கொரோனா வைரஸ்?"... "ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் புதிய ஃபார்முலா!"...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை முன்கூட்டியே அறியும் கண்டுபிடிப்பை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது 15 நாடுகளுக்கும் மேல் பரவியிருப்பது உலக மக்களிடையே பெரும் அச்சத்தை விதைத்து வருகிறது. சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ள நிலையில், 4500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வைரஸால் சீனாவுக்கு வெளியே இதுவரை எந்த இறப்புகளும் நிகழாத நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதற்கு முன்பாக சீன விஞ்ஞானிகள், அந்த வைரஸின் மரபணு வரிசையை (genome sequence) மட்டுமே வெளியிட்டிருந்தனர்.

மெல்பர்னில் இருக்கும் சிறப்பு ஆய்வுக் கூடத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், "இதுபோன்ற  சம்பவம் நடக்கலாம் எனப் பல வருடங்களாகத் தயார்நிலையில் இருப்பதால்தான் எங்களால் இவ்வளவு விரைவாக இதைச் செய்யமுடிந்தது" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்தால், கொரோனா வைரைஸைக் கண்டறிவதும், அதற்குச் சிகிச்சை அளிப்பதும் முன்பைவிட எளிமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தெரியும் முன்னரே, இதை வைத்து தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதனை செய்து பார்த்துவிடலாம்.

மேலும், இந்தக் கண்டுபிடிப்பானது, கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்தில், இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

CORONAVIRUS, AUSTRALIA, SCIENTISTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்