‘எங்க 20 வருச உழைப்பு... இனி அவ்ளோதான்’ .. அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்.. ஆபத்தில் எதிர்காலம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால் ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தாலிபான்கள் கைப்பற்றினர். 20 வருடமாக ஆப்கான் அரசுடன் நடந்து வந்த போர் அன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்ற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறிய நிலையில் காபூல் விமான நிலையத்தையும் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டு ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட உள்ளது என அறிவியல் இதழான Nature தெரிவித்துள்ளது. 1996-2001 ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்த ஆப்கானில், பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டது. அதேபோல் தாலிபான்களுக்கு எதிரான கருத்துள்ள ஆராய்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து 2004-ம் ஆண்டு அமைந்த புதிய அரசால், ஆப்கானிஸ்தானில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. உலக வங்கி மற்றும் அமெரிக்க நிறுவனங்களில் நிதியால் ஆப்கானில் பல பல்கலைக் கழகங்கள் மீண்டும் உயிர் பெற்றன. அதேபோல் ஆராய்ச்சி துறையும் முன்னேற்றம் கண்டது. புற்றுநோய் முதல் புவியியல் மாற்றம் வரை பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் ஆப்கானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதால் ஆராய்ச்சி துறைக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து தெரிவித்த காபூலில் உள்ள கடேப் பல்கலைக் கழகத்தின் பொதுசுகாதார விஞ்ஞானி அதாவுல்லா அஹ்மத், 20 ஆண்டுகளாக தாங்கள் செய்த சாதனைகள் அனைத்தும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இனி ஆப்கானில் உள்ள விஞ்ஞானிகளின் எதிர்காலம் இருண்டு விடும் என்றும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் பெரும் தேக்கம் ஏற்படும் என்றும் காபூல் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் நீர் மேலாண்மை நிபுணர் முகமது அசீம் கவலை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்