‘அவரை உடனே அரெஸ்ட் பண்ணுங்க’!.. ஆப்கான் அதிபர் போகும்போது ஒன்னும் ‘சும்மா’ போகல.. Interpol-க்கு பறந்த பரபரப்பு புகார்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாலிபான்களுக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்ற முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபரை கைது செய்யுமாறு இண்டர்போல் காவல்துறையினருக்கு ஆப்கன் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வந்த தாலிபான்கள், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி தலைநகர் காபுலில் நுழைந்தனர். அந்நகர எல்லையில் தங்களின் வீரர்களை குவித்து வைத்திருந்த தாலிபான்கள், அதிகார பறிமாற்றத்திற்காக காத்திருந்தனர்.

இதனை அறிந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, உயிருக்கு பயந்து விமானப் படை விமானத்தில் நாட்டை விட்டே தப்பிச் சென்றார். தஜிகிஸ்தானுக்கு சென்ற அவருடைய விமானத்தை அந்நாடு தரையிறக்க மறுத்தது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகளும் இருக்கின்றனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாக ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளரான நிகிடா இஷென்கோ, ‘நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தன, ஹெலிகாப்டரில் பணத்தை நிரப்ப முயன்றனர், ஆனால் எல்லா பணத்தையும் அதில் நிரப்ப முடியவில்லை. சிறிது பணம் ஓடுபாதையில் விழுந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆப்கனிஸ்தான் மக்களின் வரிப்பணத்துடன் தப்பியோடிய அஷ்ரப் கனியை கைது செய்ய வேண்டும் என்று தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரகம், சர்வதேச காவல்துறையான இண்டர்போலை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹம்தல்லா மொஹிப், பசல் மக்மூத் பஸ்லி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என ஆப்கன் தூதரகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் அஷ்ரப் கானி சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும், இனி நாட்டின் மரியாதைக்குக்கும், பாதுகாப்புக்கும் தாலிபான்களே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்