'கொரோனா' சிகிச்சை 'வார்டில்'... 'நீச்சல் உடை' அணிந்து வலம் வந்த 'நர்ஸ்'... 'ரஷ்யாவில் வைரலான புகைப்படம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மருத்துவ கவச உடைக்குள் நீச்சல் உடை அணிந்து கொரோனா வைரஸ் வார்டில் நர்ஸ் வலம் வந்த காட்சி, ரஷ்யாவில் வைரலாகி உள்ளது.

ரஷ்யாவில் மெதுவாகப் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. தற்போது வரை அங்கு சுமார் 3 லட்சத்து 8 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,900-ஐ தாண்டி இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் வார்டில் பணிபுரிந்து வரும் இளம் நர்ஸ் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது கோடை வெயில் ரஷ்யாவில் உச்சத்தில் உள்ள நிலையில், அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.

இப்படி அவர் உடை அணிந்தபடி, நோயாளிகளிடம் ஒரு தட்டில் மருந்துகள் எடுத்துச்சென்றார்

இதை யாரோ செல்போனில் படம் பிடித்து விட அந்த காட்சி, மாஸ்கோவில் இருந்து வெளிவருகிற ‘துல்ஸ்கி நோவாஸ்டி’ பத்திரிகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மின்னல் வேகத்தில் பரவியது.

நர்ஸ் இப்படி ஒரு உடையில் வலம் வந்ததை கொரோனா வைரஸ் நோயாளிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ரஷ்யா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மருத்தவ சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டும் ஆதரவும் மலை போல குவிந்து வருகிறது.

உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் அந்த செவிலியர், கடும் வெப்பம் காரணமாக இப்படி உடை அணிந்தார் என்ற உண்மையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த வெப்ப சூழ்நிலையில் இப்படித்தான் வேலை செய்ய முடியும், என அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்