'வறுத்தெடுக்கும் 2020ம் ஆண்டு...' 'சீனாவ கேப் விடாம அடிக்குது...' இந்த தடவை 'யுனான்' மாகாணத்தில்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் 5.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், அந்த நாட்டின் தென்மேற்கு மாகாணமான யுனானை திங்கள் கிழமை இரவு 9.47 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

யுனான் மாகாணத்தில் கியாஜியா (Quaojia) கவுண்டியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

யுனான் மாகாணத்தில் உள்ள 16 நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் 10 தொலைத் தொடர்பு தளங்கள் சேதமடைந்துள்ளன. பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், சுமார் 600 மீட்புப் பணியாளர்கள் பேரழிவு பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, யுனான் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர். இதேபோல் 2008 ஆம் ஆண்டில் சிச்சுவானில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 87,000 பேர்  பாதிக்கப்பட்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்