இந்த '4 நாடுகளிடம்' கற்றுக் கொள்ளுங்கள்... "இவங்க இதுல கில்லாடிகள்..." 'சார்ஸ், மெர்ஸ்' கற்றுக் கொடுத்த 'பாடம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை அழிக்க முடியாமல் உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. ஆனால், தைவான், தென்கொரியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நான்கு நாடுகள் கொரோனாவை சில நடவடிக்கைகள் மூலமாக சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளன.

தைவான்:

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் கடற்கரையிலிருந்து வெறும் 180 கி.மீ தூரத்தில்தான் தைவான் நாடு உள்ளது. சார்ஸ் தொற்று பரவிய காலத்தில் இந்த நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம், கொரோனாவை வெகு சிறப்பாக அந்நாடு கட்டுப்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 395 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தே அந்நாடு லாக்டவுனை தொடங்கி விட்டது. வெளிநாட்டுப் பயணிகளை தீவிரமாக தனிமைப்படுத்தி கண்காணித்தது. மத்திய தொற்று நோய் மையத்தில் ஜனவரி 20ம் தேதி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்களையும் தைவான் அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதியை மீறினால், 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றும் வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால் தைவான் நாடு, கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது.

தென் கொரியா:

2015ம் ஆண்டில் மெர்ஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட தென் கொரியா, கொரோனா வைரசை கட்டுப்படுத்த டிரைவ்-த்ரூ சோதனை முறையைஅறிமுகப்படுத்தியது. இதள் மூலம் தென்கொரியாவின் மக்கள்தொகையில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்களை பரிசோதிக்க முடிந்தது. ஜனவரி 3 முதல் வூஹானில் இருந்து வரும் மக்களைத் சோதனையிடுவதிலும் தனிமைப்படுத்துவதிலும் இந்த நாடு துரிதமாக செயல்பட்டது.

ஜெர்மனி:

ஜெர்மனியில் கொரோனா தொற்றால், 1.38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் இறப்பு விகிதம், மற்ற ஐரோப்பிய அண்டை நாடுகளை விட மிகக் குறைவாக இருந்து வருகிறது. இதுவரை, ஜெர்மனியின் இறப்பு எண்ணிக்கை 4,105 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கையில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

பெருமளவு கட்டுப்படுத்தியதற்கு ஜெர்மனியின் சுகாதார அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 12,000 படுக்கைகள் தேவைப்படும் பொழுது, 1,47,000 படுக்கைகளை தயார்ப்படுத்தி வைத்திருந்தது. இது தேவையை விட 12 மடங்கு அதிகமாகும். அதனாலேயே பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது.

ஐஸ்லாந்து:

ஐஸ்லாந்தில் 1,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், இதுவரை 8 உயிரிழப்புகளை மட்டுமே கொண்டுள்ளது. அந்நாடு சோதனையிட்டதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்த அறிகுறிகளும் காட்டவில்லை. முதல் 6 பேர் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இத்தாலியில் இருந்து வந்த அனைத்து பயணிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விதித்தது. அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, போலீஸ் படையைப் பயன்படுத்தி அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களில் தங்கியிருப்பதை உறுதிசெய்தது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்