‘எல்லாம் கைகூடி வர நேரத்துல இப்படியா நடக்கணும்’!.. கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 4,400 கோடி அபராதம் விதித்த பிரான்ஸ்.. பரபரப்பில் ‘Tech’ உலகம்..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் நாடு 4,400 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் மற்ற செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும்போது, அந்த செய்தி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு அளிப்பதில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஏஎஃப்பி, ஏபிக் மற்றும் எஸ்இபிஎம் (AFP, APIG and SEPM) ஆகிய செய்தி நிறுவனங்கள் கூகுள் மீது புகார் தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்களின் செய்திகளை கூகுள் நிறுவனம் பயன்படுத்தும் போது நெய்பரிங் ரைட்ஸ் (Neighbouring Rights) என்பதன் அடிப்படையில் உரிய பணப்பலன் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. அதற்காக வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் கூகுள் நிறுவனம் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் கூகுள் நிறுவனம் மீது அந்த செய்தி நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.

இந்த புகாரின் அடிப்படையில், பிரான்ஸ் நாட்டின் சந்தைப் போட்டிகளை கண்காணிக்கும் ஒழுங்குமுறை ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 4,400 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. மேலும் இந்த அபராதத் தொகையை எப்படி செலுத்தப்போகிறது என்பதைப் பற்றி கூகுள் நிறுவனம் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு 9 லட்சம் யூரோ (சுமார் 8 கோடி ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த முடிவு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எங்கள் தளத்தின் செய்திகளை கையாள்வதற்கு நாங்கள் அளித்த முக்கியத்துவத்தை, அதன் பின்னணியில் உள்ள எங்களின் உழைப்பைப் பிரதிபலிப்பதாக இல்லை. சில செய்தி நிறுவனங்களுடன் கிட்டத்தட்ட சமரசம் எட்டி விட்டோம். எல்லாம் முடிந்து முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழலில் இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என அதிருப்தி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்