'யூடியூப் மூலம்... மோசடி செய்த பணத்தை... Hi-Tech Level-ல் லாவகமாக பயன்படுத்திய கில்லாடி மதன்'!.. அதிர்ந்து போன காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாகப் பேசி பெருமளவில் சொத்துகளை சேர்த்துள்ள பப்ஜி மதன் தேடப்பட்டுவரும் நிலையில், அவர் மோசடி செய்த பணத்தை அவர் பயன்படுத்திய விதம் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சேலத்தை பூர்வீகமாக கொண்ட மதனும் கிருத்திகாவும் பொறியியல் பட்டதாரிகள். அரசால் தடைசெய்யப்பட்ட PUBG கேமை ஆன்லைனில் விளையாட, அதற்காக யூடியூப் சேனல்கள் தொடங்கி அதில் 8 லட்சம் பேர்களை Subscriber ஆக சேர்த்துள்ளனர். வீடியோக்களில் பெண்களின் அந்தரங்கம் குறித்து ஆபாசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பதிவேற்றம் செய்துவந்ததை கிருத்திகா ஒப்புக்கொண்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

மதன் சென்னை வீட்டில் வைத்துதான் தனது யூடியூப் சேனலை இயக்கி வந்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக மதன், தான் நடத்தி வந்த யூட்யூப் சேனல்கள் மூலம் மாதம் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரை பணம் சம்பாதித்து வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

யூடியூப்பில் மதன் பேசும்போது அதற்கு பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு கிருத்திகா பெண் வாய்ஸ் கொடுத்துள்ளார் போன்ற தகவல்கள் போலீசாரின் விசாரணையில் வெளியானது. அவரது வீட்டிலிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன், டேப்லட், கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டது. மதன் பதுங்கி இருக்கும் இடம் குறித்து கிருத்திகா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, தன்னை ஒரு சமூக அக்கறை கொண்டவர் போல காட்டிக் கொண்டு தினமும் லைவில் ஏதாவது ஏழை நோயாளிக்கு உதவுவது போல Paytm மற்றும் Google Pay எண்களை வழங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால், அந்த பணத்தின் மூலம் இவர் யாருக்கும் உதவி செய்யவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், அவரை யூடிபில் வள்ளல் போல புகழ்வதற்காக இவருடன் விளையாடும் சில நபர்களுக்கு மாதந்தோறும் நல்ல தொகை ஒன்றை சம்பளமாக கொடுத்துள்ளார். அதில் மனைவியின் ஏற்பாட்டின் பேரில் 4 இளம் பெண்களும் விளையாடியது தெரியவந்துள்ளது.

கிருத்திகா வீட்டில் இருந்தே மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், எந்த வேலைக்கும் செல்லாமல் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் விளையாடும் மதனின் வங்கி கணக்கிலும், கிருத்திகாவின் வங்கி கணக்கிலும் கோடிக்கணக்கில் பணம் இருப்பு உள்ளதையும், அப்படி ஏமாற்றி வசூலித்த தொகையில் 3 AUDI கார்களை வாங்கியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அவரது 2 யூடியூப் சேனல்களுக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தது முதல், அட்மினாக இருந்து ஏராளமான வசதியான வீட்டுப் பெண்களிடம் மதனை பேசவைத்து அதன் மூலம் பணம் பறிப்பில் ஈடுபட்ட கிருத்திகாவையும், அவர்களது மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த மதனின் தந்தை மாணிக்கத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் தான், யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குவர்த்தகம் மற்றும் பிட்காயினில் மதன் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மதன் மீது போக்சோ சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை காவல்துறையினர் சேர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், பாலியல் தொல்லையால் பாதிப்படைந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் தைரியமாக முன்வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது பெயர் விவரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் சென்னை கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் பிரிவு போலீசார் உறுதியளித்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்