'நாம தனியா இருக்கலாம்'.... 'சபலம் ஏற்படுத்திய 'டேட்டிங் ஆப்'...நம்பி போனவர்களுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் நகை, ஏ.டி.எம். கார்டு மற்றும் பணம் பறிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தது. இது காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. தனியாக நடந்து வந்த தங்களை மிரட்டி அழைத்து சென்று நகை பணம் பறிக்கப்பட்டதாக சிலரும், இருசக்கர வாகனத்துடன் மிரட்டி அழைத்து சென்று வழிப்பறி செய்ததாக சிலரும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்கள்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்திருந்த தகவல் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அவர்கள் சொன்ன இடத்தில் அந்த நேரத்தில் அதுபோல சிசிடிவி காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. இது காவல்துறையினருக்கு குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. புகார் அளித்தவர்கள் ஏதோ உண்மையை மறைப்பதை உணர்ந்து கொண்ட காவல்துறையினர் மீண்டும் அவர்களை அழைத்து விசாரித்த போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

தங்களை செல்போனில் அழைத்த இளைஞர்கள், தனியாக அழைத்து சென்று தங்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் புதிய தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த செல்போன் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,, ஷாஜகான், சபரீஷ் கண்ணன், பிரதீப், பிபீன் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் செல்போனில் உள்ள டேட்டிங் செயலி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 'Grindr App' என்னும் டேட்டிங் செயலி மூலம் செல்போன் நம்பருடன் தங்கள் வயதை பதிவிட்டு, அதே ஆப்பில் இணையை தேடும் 50 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களிடம் ஆசையை தூண்டும் விதமாக பேசியுள்ளனர்.

அதில் மயங்குபவர்களை தனியாக இருக்கலாம் என அழைத்து சென்று, கும்பலாக சேர்ந்து அந்த நபரை அடித்து உதைத்து நகை பணத்தை பறித்துக் கொண்டு தப்பித்து செல்வது இவர்களது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த ஆப் மூலமாக தவறான உடல் சார்ந்த தேடல்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவுவதாக கடந்த வருடம் சர்வதேச அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது இதன் மூலம் வழிபறியும் நடைபெறுவது பலரையும் அதிரசெய்துள்ளது.

ஒரு நிமிட சபலம் ஒருவரை எந்த விதமான ஆபத்தான நிலைக்கு அழைத்து செல்கிறது என்பதற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணமாகும். எனவே 'Grindr App' போன்று தவறான பாதைக்குஅழைத்து செல்லும் செயலிகளிடமிருந்து தள்ளி இருப்பதே சிறந்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

ROBBERY, GRINDR APP, TIRUPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்