'நான் டாக்டர் ஆவேன், மனசு பூரா இருந்த கனவு'... 'திடீரென மொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்ட துயரம்'... கோவையில் நடந்த சோகத்தின் உச்சம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனது முழுவதும் மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசையோடு இருந்த 19 வயது இளம் மாணவியின் மரணம் ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

கோவை மாவட்டம் ஆர்.எஸ் புறம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவருடைய மகள் சுபஸ்ரீ. 19 வயது மாணவியான இவருக்குச் சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். ஆனால் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்-சில் சேர நீட் தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார்.

தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வுகளை நடத்தலாம் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து செப்டம்பர் மாதம் நீட், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கிடையே கடந்த முறை தோல்வி அடைந்ததால் அடுத்த மாதம் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா, என்பதில் சுபஸ்ரீ குழப்பத்தில் இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருத்துவர் கனவோடு இருந்த மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. மகளின் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறித் துடித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அனிதா என்ற மாணவி 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் மருத்துவ கனவோடு இருந்த அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கோவை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்