கைதாவாரா யாஷிகா?.. வேகமெடுக்கும் விசாரணை!.. பரபரப்பை கிளப்பும் காவல்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய வழக்கில், போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவனி மற்றும் ஆண் நண்பர்கள் இருவருடன் கடந்த 24ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் வந்த போது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி ஷெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, யாஷிகாவும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கார் விபத்து விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் (FIR) விவரம் வெளியாகியுள்ளது. முதலில் யாஷிகா புதுச்சேரிக்கு செல்லவில்லை என்பதும், மாமல்லபுரத்திலுள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு வரும் போது தான் விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ள போலீசார், 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த விபத்தின் சிசிடிவியை யாஷிகா விபத்தில் சிக்கிய சிசிடிவி என சிலர் தவறாக பரப்பி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, யாஷிகாவின் தோழி வள்ளி ஷெட்டி, காரின் சன் ரூஃப்பை திறந்து வைத்துக்கொண்டே பயணித்ததாகவும், அப்போது அவருடைய ஆடை, காரை ஓட்டிக் கொண்டிருந்த யாஷிகாவின் முகத்தில் விழுந்ததால் வழி தெரியாமல் விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்துக்கு காரணம் வள்ளி ஷெட்டி பவனி தான் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனையும் உறுதிபடுத்தாத போலீசார், அதிவேகப் பயணம் தான் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான், விபத்து குறித்து யாஷிகாவின் ஆண் நண்பரிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, நடிகை யாஷிகா மீது அதிவேகப் பயணம், அலட்சியத்தாலும் (279 IPC), ஆபத்தான செயலின் மூலமும் மற்றவர் உயிருக்கு தீங்கு விளைவித்தல் (337 IPC), விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் (304 A) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்