'மேக்-அப் இல்ல, கண் இமைகள் இல்ல'... 'ஏன் செயற்கைப் பல் கூட இல்ல'... தனது உண்மையான முக அழகை காட்டிய 'டிக்டாக் பிரபலம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பெண் ஒருவர் தனது உண்மையான அழகைக் காட்டியதால் டிக்டாக் நட்சத்திரமாக ஜொலித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தங்களை அழகாக, கவர்ச்சிகரமாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் பாலின பேதம் இன்றி அனைவரிடமும் இருக்கிறது.  ஒரு புகைப்படம் எடுத்தாலே அதைப் பலமுறை பார்த்து, அதற்கு ஃபில்டர் போட்டு அதை இன்னும் அழகாக்கி தனக்கு முழு திருப்தி வந்தால் மட்டுமே அதனைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது பலரின் வழக்கம் ஆகும்.

ஆனால் இந்த வழக்கமான நடைமுறையை உடைத்த அமெரிக்காவைச் சேர்ந்த அலிஸியா என்ற பெண்மணி தனது உண்மையான அழகைக் காட்டியதால் டிக்டாக் நட்சத்திரமாக ஜொலித்துள்ளார். 36 வயதான அலிஸியாவுக்குத் திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. 4 குழந்தைகளும் உள்ளனர்.

இதில் கடைசி முறையாக அவர் கருவுற்றபோது அவரது உடல் நலன் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக அவரது பற்கள் மோசமாக சிதைவுக்குள்ளாகின. இதனால் தனது மொத்தப் பற்களையும் இழந்துள்ளார் அலிஸியா. இதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு செயற்கைப் பற்களைக் கட்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் அலிஸியா இதோடு நின்றுவிடவில்லை, தனது டிக்டாக் பக்கத்தில் அட்டகாசமான மேக்கப், கவர்ச்சிகரமான உடைகளோடு வீடியோ பகிரும் அதே வேளையில், தனது போலிப் பற்கள், மேக்கப் என செயற்கைப் பூச்சுகளை நீக்கிவிட்டு தனது அசல் முகத்தோடு வீடியோ பகிர்ந்துள்ளார். போலிக் கவர்ச்சிக்கும், நிஜக் கவர்ச்சிக்கும் ஒப்பீடு செய்யும் காணொலிகளையும் பகிர்ந்துள்ளார்.

சில காணொலிகளில் ஒப்பனை, சவுரி முடி, செயற்கைப் பற்கள், போலிக் கண் இமைகள் எனத் தான் மேக்கப் அணிந்து எப்படித் தயாராகிறேன் என்பதையும் மொத்தமாக ஆவணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அலிஸியாவின் நேர்மையை, அவர் வெளிப்படையாக இருப்பதைப் பாராட்டி நாளுக்கு நாள் அவரைப் பின்தொடரும் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 10 லட்சம் பேர் தன்னைப் பின்தொடர்வதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் அலிஸியா.

அதேநேரத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் பல்லில்லாத இவரது தோற்றத்தைக் கிண்டல் செய்யும் விதமாக இவரைத் தொடர்ந்து பூனை மீன் (catfish/கெளுத்தி மீன்) என்று சிலர் பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

இதற்குப் பதிலளித்துள்ள அலிஸியா, ''நான் திருமணமாகி, 4 குழந்தைகளுடன், 15 வருடங்களாகச் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். நான் ஒப்பனைக் கலை பயின்றவளும் கூட. எனவே நான் எனக்காக ஒப்பனை செய்துகொள்கிறேன். எல்லோரையும் போல அதை அணியும் உரிமை எனக்கும் உண்டு" என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்