‘அனுமதியின்றி’ நடைப்பயிற்சி... கணவருடன் சென்ற ‘கோவை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘கதறிய’ நண்பர்கள்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் அனுமதியின்றி வனப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண் ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதியைச் சேர்ந்த தம்பதி புவனேஸ்வரி (40) - பிரசாந்த் (45). இந்த தம்பதி தங்கள் நண்பர்கள் 6 பேருடன் நேற்று காலை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பாலமலை வனப்பகுதிக்கு நடைபயிற்சிக்காக சென்றுள்ளனர். இந்தக் குழு பசுமணி என்ற இடத்தில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்துள்ளது.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அனைவரும் உடனடியாக அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளனர். அப்போதும் விடாமல் காட்டு யானை துரத்தி வர, புவனேஸ்வரியால் வேகமாக ஓட முடியாமல் போயுள்ளது. இதையடுத்து புவனேஸ்வரியை துதிக்கையால் வளைத்துப் பிடித்த யானை, அவரைத் தூக்கி வீசியுள்ளது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புவனேஸ்வரியை யானை காலால் மிதிக்க, அவர் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த யானை அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த புவனேஸ்வரியின் கணவர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் சிதைந்துபோன நிலையில் இருந்த அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் மற்றும் போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வனத்துறையினர் எச்சரிக்கையையும் மீறி இதுபோல அவ்வப்போது சிலர் வனப்பகுதிக்குள் நடைப்பயிற்சிக்கு செல்வது தொடர் கதையாகிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

COIMBATORE, ELEPHANT, WOMAN, FOREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்