‘பல நாள் தண்ணீர் தான் உணவு’!.. பிள்ளைகளுக்காக ‘பட்டினி’ கிடந்த தாயின் பரிதாப நிலை.. கண்கலங்கிய தாசில்தார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குழந்தைகளுக்காக பல நாட்கள் பட்டினி கிடந்த தாய் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் உஷா. இவருக்கு பாலா, அன்பு என்ற இரு ஆண் குழந்தைகளும், தரணி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு உஷாவின் கணவர் வீராசாமி மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வீட்டு வேலைகள் செய்து குழந்தைகள் உஷா காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், வீட்டு வேலை கிடைக்காமல் உஷா தவித்துள்ளார். இதனால் பல நாட்கள் குழந்தைகளுடன் உஷா பட்டினி கிடந்துள்ளார். அவ்வப்போது கிடைக்கும் உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு உஷா பட்டினியாகவே கிடந்துள்ளார். பல வேளைகளில் தண்ணீர் மட்டுமே அவருக்கு உணவாக இருந்துள்ளது. இதன்காரணமாக நாளடைவில் எலும்பும் தோளுமான உஷா, உடல்நலம் குன்றியுள்ளார்.

தாய் படுத்தப்படுக்கையாக கிடப்பதைக் கண்ட குழந்தைகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். உஷாவின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான பக்ரூதீன், பிரபு உள்ளிட்ட இளைஞர்கள் அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உஷாவுக்கு குளுக்கோஸ் செலுத்தியும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. திட உணவுகளை சாப்பிட முடியாமல் உஷா கஷ்டப்பட்டு வருகிறார். உணவாக பால் மட்டுமே அவரால் எடுத்துக்கொள்ள முடிகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் தாயின் அருகே செய்வதறியாது குழந்தைகள் சோகத்துடன் சுற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, பலரும் உஷாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். அதேபோல் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், தாசில்தார் தரணிகா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உஷாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

இதனை அடுத்து கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அப்போது, ‘என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ என உஷா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதைக் கேட்டு கண்கலங்கிய தாசில்தார் தரணிகா, ‘உங்கள் குழந்தைகள் நல்லபடியாக இருப்பார்கள்’ என உறுதியளித்தார்.

இதனை அடுத்து குழந்தைகளுக்கு புது துணிகள் எடுத்துக் கொடுத்து, அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தன்னிடமிருந்து குழந்தைகள் பிரிந்து செல்வதைக் கண்டு உஷா கண்கலங்கினார். உடல் நலம் நன்றாக குணமடைந்ததும் குழந்தைகளை பார்க்கலாம் என தாசில்தார் தரணிகா ஆறுதல் கூறினார்.

மேலும் உஷா தனது குழந்தைகளிடம் பேசும் வகையில் செல்போன் ஒன்றும் அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் உஷாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்