‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஹெல்மெட் அணியாமல் சென்ற பெண்ணை காவலர் தடுத்து நிறுத்திய போது ஏற்பட்ட விபத்தில் அவருடைய கால் நசுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பொன்னேரி அருகே உள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பிரியா (23). சமீபத்தில் திருமணமான இவர் நேற்று இரவு தனது தாயின் பிறந்தநாளுக்காக கேக் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அங்கிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சாலையைக் கடக்க முயன்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுத்துள்ளார். இதில் அவர் தடுமாறி கீழே விழ அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர்மீது ஏறியுள்ளது. லாரி ஏறியதில் 2 கால்களும் நசுங்கி அவர் வலியால் துடித்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பிரியாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவரும் நிலையில், விபத்துக்கு காவலரே காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் செங்குன்றம் - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த ஊர்க்காவல் படை வீரரின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 7 பேரை சோழவரம் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

CHENNAI, GIRL, BIKE, HELMET, POLICE, LORRY, ACCIDENT, LEG, FIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்