‘எங்கள ஊர விட்டே ஒதுக்கி வச்சுட்டாங்க...’ சொத்துப் பிரச்சனைக்காக நடந்த சம்பவம்... விபரீத முடிவை எடுத்த பாட்டி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவில்பட்டி அருகே ஊரே விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தூத்துகுடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட நக்கலைக்கோட்டையைச் சேர்ந்த முத்தால்ராஜ் என்பவர் அந்த கிராமத்தில் உள்ள தனசேகரன் என்பவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தினை வாங்கியுள்ளார்.

அந்த ஏழு ஏக்கர் இடத்தினை ஊர் பயன்பாட்டுக்காக பொது மக்கள் ஒன்று சேர்ந்து வாங்க இருந்ததாகவும், அதையும் மீறி முத்தால் ராஜ் வாங்கியதால், ஊர்க் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி முத்தால் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் என ஆறு குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து முத்தால் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என பலரிடம் புகார் மனு அளித்தனர். இதையெடுத்து அதிகாரிகள் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை.

தங்களது 6 குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால், கடைகளில் பொருட்கள் வாங்க முடியவில்லை, உள்ளூர் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை, ஆறு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு ஆட்டோவில் செல்ல அனுமதி அளிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஊரை விட்டு தங்கள் குடும்பங்களை ஒதுக்கி வைத்த ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி , முத்தால் ராஜ் சகோதரி சண்முகவேல் தாய் கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து எட்டயபுரம் போலீசார் கடந்த டிசம்பர் 16-ம் தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் யார் மீதும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பலமுறை காவல் நிலையத்திற்கு சென்று, எவ்வித முறையான பதிலும் தராத காரணத்தினால் மனமுடைந்த சண்முகவேல் தாய் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அவருடன் வந்த சண்முகவேல் தாய் பேரன் 5-ம் வகுப்பு படிக்கும் சதிஷ் பேசுகையில், இடப் பிரச்சினை தொடர்பாக தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது என்றும், அதை மீறி கடைக்காரர்கள் பொருட்கள் கொடுத்தால் ரூ 2500 அபராதம் விதிக்கப்படுவதாகவும் சிறுவன் சதீஸ் கூறினார்.

GRANDMOTHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்