'பேங்க் லோன் வாங்கித் தாரோம்’... 'இளம் பெண்ணின் அழைப்பை நம்பி’... ‘சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சாலிகிராமம் கே.கே.கார்டனை சேர்ந்தவர் மீனா (35). இவர் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, ஆன்-லைன் மூலம் தனது செல்ஃபோன் எண்ணை, விளம்பரம் செய்துள்ளார். பாரிமுனை 3-வது கடற்கரை சாலையைச் சேர்ந்த சங்கர் (30) என்பவர் இவருக்கு உதவியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், ஆன்லைன் விளம்பரத்தை நம்பி சிலர் அந்த நம்பருக்கு பேசியுள்ளனர். அப்போது வங்கியில் கடன் பெற்று தருகிறோம். உங்களுடைய ஆதார் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை தங்களது மண்ணடி அலுவலகத்திற்கு கொண்டு வரவும் என அவர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி சென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்துரு, பிரவின்குமார், பாரிமுனையைச் சேர்ந்த பெளசியா பேகம் ஆகியோரிடம் இருந்து, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

சில விண்ணப்பங்களில் அவர்களிடம் கையெழுத்து பெற்ற மீனா மற்றும் சங்கர், கடனுக்கு கமிஷன் என்று கூறி சில லட்சங்களையும் பெற்றுள்ளனர். பின்னர் லோன் வாங்கித் தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றியும் வந்துள்ளனர். இதற்கிடையில், ஆவணங்கள் கொடுத்தவர்களின் செல்ஃபோன் நம்பருக்கு, தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கியதற்கான முதல் தவணையை கட்டும்படி, எஸ்எம்எஸ் வந்துள்ளது. கடனில் எந்த பொருட்களும் வாங்காதபோது, இதுபோல் எஸ்எம்எஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும், இதுபற்றி விசாரித்துள்ளனர்.

அப்போதுதான், வங்கியில் கடன் வாங்கி தருவதாக தங்களிடம் பெற்ற ஆவணங்களை, பிரபல கடைகளில் கொடுத்து, தங்களுக்கே தெரியாமல் டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை இவர்களின் பெயர்களில் தவணை முறையில் மீனா மற்றும் சங்கர் வாங்கியது தெரியவந்தது. மேலும் வாங்கிய பொருட்களை அவர்கள் விற்று, காசாக்கி மோசடி செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், மீனா மற்றும் சங்கர் இருவரும் சேர்ந்து, பலரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று, வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் வாங்கி விற்று பணமாக்கி, சுமார் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்தது தெரிந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இவர்கள் இருவரும் வேறு எங்காவது இதுபோன்று ஆவணங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CHENNAI, LOAN, BANK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்