'வாயிலிருந்து வந்த ஆபாச வார்த்தைகள்'... 'என் அப்பா யாருன்னு தெரியுமா?'... 'எல்லாம் 'Body one' கேமராவில் ரெகார்ட்'... 'யார் அந்த இளம்பெண்'... வெளியான முழு விவரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மது போதையில் வந்து, வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசாரிடம் தகராறு செய்ததுடன் அவர்களை தகாத வார்த்தைகளால் இளம்பெண் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையின் ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் வார இறுதி நாட்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு வாகனங்களை வேகமாக இயக்குவார்கள். இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் போலீசார் திருவான்மியூர், பெசன்ட் நகர் ஈ.சி.ஆர் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறமுள்ள சவுத் அவென்யூ சாலையில் ஒரு போக்ஸ்வேகன் போலோ கார் ஒன்று வேகமாக வந்தது.

இதைக் கவனித்த போலீசார் உடனடியாக அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்போது அந்த காரில் இருந்த இளைஞரும்  இளம்பெண்ணும் அளவுக்கு அதிகமான மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில், அவர்களைப் பணி செய்ய விடாமல் இளம் பெண் போலீசாரை மிகவும் ஆபாசமாகத் திட்டியும், போலீசாரை அடிக்கவும் முயற்சி செய்தார்.

இந்நிலையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக இளைஞர் மீதும் இளம் பெண் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அடையாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதான டோட்லா சேஷூ பிரசாத் என்பது தெரிய வந்தது. போலீசாரிடம் நான் யார் தெரியுமா, எனது தந்தை யார் தெரியுமா என வீர வசனம் பேசிய அந்த பெண், சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த மருத்துவ தம்பதியரின் மகள் காமினி என்பது தெரிய வந்தது.

காமினி திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், டோட்லா சச்சின் பிரசாத் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இளம்பெண்  காமினி மீது ஆபாசமாகத் திட்டுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் காமினியிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போக்குவரத்துக்கு ஆய்வாளர் மாரியப்பனை ஆபாச வார்த்தையால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் மதுபோதையில் கார் ஓட்டிய டோட்லா சச்சின் பிரசாத், காமினி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பணியிலிருந்த போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகப் பேசிய இளம்பெண் காமினி குறித்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து போலீசார் பணி நேரத்தில் தங்களது உடலில் பொருத்தப்பட்டிருந்த பாடி ஒன் (Body one) கேமராவில் பதிவான காட்சிகள் போலீசார் வழக்குப் பதிவு செய்ய பெரும் உதவியாக அமைத்துள்ளது.

பணியில் இருக்கும் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் Body one கேமராவானது, இதற்கு முன்பு தி.நகர் துணை ஆணையாளராக இருந்த அரவிந்தன் ஐபிஎஸ்யால் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னாள் சென்னை மாநகர ஆணையர் விஷ்வநாதன் அவர்களால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது இதுபோன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் நடவடிக்கை எடுக்க Body one கேமரா பெரும் உதவிக்கரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்