‘அசுர வேகத்தில் வந்த ரயில்’... ‘தண்டவாளத்தில் ஸ்கூட்டியில்’... ‘2 குழந்தைகளுடன் சிக்கிய பெண்’... 'சென்னையில் நூலிழையில் நடந்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை கொருக்குப்பேட்டையில் வேகமாக ரயில் வந்த போது, அதனை அறியாமல் குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடக்க முயன்றப் பெண், நொடியில் துரிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பினார்.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சுமதி. இவர் தனது இரு குழந்தைகளையும் பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் ரயில் செல்வதற்காக கேட் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. ஆனால் சுமதி தனது குழந்தைகளை விரைவாக பள்ளியில் விடவேண்டும் என்ற அவசரத்தில் ரயில்வே கேட்டை கடந்து தண்டவாளத்தை கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது தண்டவாளத்தின் நடுவே இருசக்கர வாகனம் பழுதாகி நின்றது. அந்த நேரத்தில் சென்னை - நெல்லூர் விரைவு ரயில் வேகமாக வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து வாகனத்தை இயக்க முடியாததால், அதனை அப்படியே விட்டுவிட்டு சமயோசிதமாகவும் விரைந்தும் செயல்பட்ட சுமதி தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தை கடந்து தப்பினார்.

ஆனால் தண்டவாளத்தில் நின்ற வாகனம் விரைவு ரயிலில் சிக்கி சிதைந்தது. வெகு தூரம் ரயிலால் இழுத்துச் செல்லபட்ட இருசக்கர வாகனத்தின் பாகங்களை மீட்டப்பிறகு ரயில் சேவை தொடங்கியது. ரயில் வருவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டு வாகனங்கள் செல்ல தடுப்புகள் போட்டாலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ACCIDENT, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்