'குழந்தை, குட்டிகளோடு ஷாப்பிங் போற நேரமா'...'கொஞ்சம் கூட பயம் இல்ல'...இனி வேற பிளான் தான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் இல்லாமல், அத்தியாவசிய பொருட்களை வாங்கக் குழந்தைகளோடு பெற்றோர் வெளியே செல்வது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம் என்பதற்காக மத்திய அரசு இந்த உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காய்கறி, மளிகை, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கடைகளைத் திருந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல்  திண்டுக்கல் நகரில் பலர் அலட்சியப்போக்குடன் சுற்றி திரிவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாகக் காய்கறிகளை வாங்குவதற்குச் சிலர், குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. போலீசார் கடுமையாக எச்சரிப்பதோடு, தினமும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து வருகிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் இதுகுறித்த எந்தவித அச்சமும் இல்லாமல் சாலையில் ஜாலியாக சுற்றி வருகிறார்கள். போலீசார் அவர்களை நிறுத்திக் கேட்டால். காய்கறி வாங்கச் செல்கிறேன், அல்லது மருந்து வாங்கச் செல்கிறேன் எனக் கூறுகிறார்கள். எவ்வளவு தான் போலீசார் கடுமையாக இருந்தாலும், பொதுமக்கள் கொரோனா குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனால் இனிவரும் நாட்களில் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்