'மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்'... 'குழந்தைகள் கண் முன்னே நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

500 ரூபாய் பணத்துக்காக மனைவியின் கை, கால்களைக் கட்டி, தீ வைத்து கணவன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதான செந்தில். இவர் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அகனி கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கேரளாவில் வேலை பார்த்து வந்த செந்தில், 2 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த செந்தில், 2,000 ரூபாயை மனைவியிடம் கொடுத்துவிட்டு, தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பணத்தில் 500 ரூபாயை எடுத்து, கவுசல்யா தனது மகளின் மருத்துவத்திற்கு செலவு செய்து விட்டார். இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கவுசல்யா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றார். பின்னர் சமாதானம் அடைந்த கவுசல்யா, மண்ணெண்ணெய்யுடன் இருந்த ஆடைகளை மாற்ற முயன்றுள்ளார்.

அப்போது செந்தில், தீக்குச்சியை கொளுத்தி கவுசல்யா மீது போட்டதாகத் தெரிகிறது. இதனால் தீ கவுசல்யாவின் உடல் முழுவதும் பற்றி எரிந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் அவர்களது குழந்தைகளின் கண்முன்னே அரங்கேறியுள்ளது. பின்னர், குழந்தைகளை வெளியே அனுப்பிய செந்தில், வீட்டைப் பூட்டிவிட்டு அவரும் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த தீக்காயங்களுடன் பூட்டிய வீட்டில் கதறிக் கொண்டிருந்த கவுசல்யாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா திங்கள்கிழமையன்று உயிரிழந்தார். இதனையடுத்து கணவர் செந்திலை, சீர்காழி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MURDER, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்