திமுக அமைச்சரவையில் உதயநிதி இடம் பெறவில்லை!.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 16வது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் தரப்படவில்லை.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கோட்டையான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் களமிறக்கப்பட்டு 69000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

திரைப்பட தயாரிப்பாளராக தனது கலை உலகப் பயணத்தை தொடங்கிய உதயநிதி, பின் நாட்களில் நடிகராகவும் திரையில் தோன்றினார். அவரது திரைத்துறை அனுபவத்தைக் கடந்து, முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குநர், திமுகவின் இளைஞர் அணி செயலாளர் என தனது நிர்வாகத்திறமையையும் பல தருணங்களில் நிரூபித்துள்ளார்.

1984ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், தனது தந்தையை விஞ்சி முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பரப்புரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். 

குறிப்பாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியை முன்வைத்து அவர் செய்த 'ஒற்றை செங்கல்' பிரச்சாரம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியாகியுள்ள திமுக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதியின் பெயர் இல்லை. 

புதிய அமைச்சரவையில் மொத்தம் 34 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி அளிப்பட்டுள்ளபோதிலும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதிக்கு அமைச்சரவையில் இடமளிக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு வேலை வாரிசு அரசியல் என்று பெயர் வரக்கூடாது என்பதால் இப்போதைக்கு உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்படமால் இருக்கலாம். சட்டமன்ற உறுப்பினர் பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. மக்கள் உதயநிதியை வாரிசு என நினைக்கவில்லை. தகுதியை பார்த்து தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், அமைச்சர் பதவி என்று வரும் போது அதை ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, மகனுக்கு அமைச்சர் பதவி தந்தால் வாரிசு அரசியல் என விமர்சனங்கள் வரக்கூடும் என்று அவர் எண்ணி இருக்கலாம். மக்கள் பிரதிநிதியாக உதயநிதி அனுபவம் பெற்ற பிறகு வேண்டுமானால் அமைச்சராக்கப்பட வாய்ப்புகள் அதிகம். 

இதற்கிடையே, உதயநிதி முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இது போன்ற செயல்பாடுகள், சக கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெறுவதோடு, அவரது அரசியல் எதிர்காலத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்