சுஜித்தின் உடல் 'முழுமையாக' மீட்கப்பட்டதா?.. துணியால் மறைத்தது ஏன்?.. காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தின் உடல் ஏன் காட்டப்படவில்லை? என்னும் கேள்வி தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. மேலும் சுஜித் விஷயத்தில் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் சுஜித் உடல் மீட்கப்பட்டது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''சுஜித் மீட்புப்பணியில் கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப்பணியாளர்களை கவலையடைய செய்துள்ளது. சுஜித் மீட்புப்பணிகள், மீட்டது தொடர்பாக சுஜித் பெற்றோர்களுக்கு முழுமையாக தெரியும்.

இறந்த சடலம் அதற்குரிய மரியாதையோடுதான் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை சொல்லும் முக்கிய விஷயம்.அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே சுஜித் உடல் மீட்கப்பட்டது. பேரிடர் மீட்புப் படையின் வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது.உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்புப் பணி என்பது வேறு, சடலமாக மீட்கும் போது அதே மீட்புப் பணி மாறுபடும்.

விபத்து, போர், பேரிடர் போன்றவற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் தான் பின்பற்றப்பட்டுள்ளது. அதாவது, இதுபோன்று மரணம் அடைந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு எதிரானது.

இதற்கு முன்பு, கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் கடுமையான விமரிசனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதன் பிறகு இது பற்றி விதிமுறை உருவாக்கப்பட்டது. அதன்படியே குழந்தை சுஜித்தின் உடல் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தவில்லை.

மீட்புப்பணியில் பலகோடி செலவானதாக வாட்ஸ்அப்பில் வரும் தகவல் முழுவதும் வதந்தி. போர்வெல் என்பது விபத்து தான், பேரிடர் அல்ல. சுஜித்தை மீட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது. மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் முடியுமோ, அந்த அனைத்து வழிகளிலும் சுஜித்தை மீட்க முயன்றோம்,'' என தெரிவித்துள்ளார்.

SURJITH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்