வார்த்தயைவிட்ட எம்.ஜி.ஆர்.. சீறிய திமுக.. குண்டர் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்ட காரணம் இதுதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை : குண்டர் சட்டம் இதுதான் சமீப காலங்களில் தமிழக ஊடகங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை. அதென்ன குண்டர் சட்டம்? வாங்க பார்க்கலாம்..
பொதுவாக வன்முறையாளர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் இந்த குண்டர் சட்டத்தின்படி கைதுசெய்யப்படும் ஒருவரை விசாரணை ஏதுமின்றி 12 மாதங்கள் வரையில் சிறையில் அடைக்க முடியும். அவருக்கு பிணை என்கின்ற ஜாமீனும் கிடைக்காது.
குண்டர் சட்டம் பாய்ந்த ஒருவர் தன்மீது குற்றமில்லை என்றாலும் அதனை எதிர்த்து வழக்கறிஞரை நாட முடியாது. அவரது உறவினர்கள் மேல்முறையீட்டு குழுவை அமைக்க அனுமதிகோரலாம்.
என்ன தண்டனை
இந்திய தண்டனைச் சட்டம் 16, 17, 22, 45 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் குண்டர் சட்டத்தினால் கைது செய்யப்பட்ட நபரை முன்கூட்டியே விடுதலை செய்யவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல, குண்டர் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர், விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் வரையில் அவரை சிறையில் அடைக்கவும் இச்சட்டத்தில் இடமுள்ளது.
ஏன் இயற்றப்பட்டது
இப்படி ஒரு சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது ஏன்? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால் எந்த சூழ்நிலையில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சர்க்கரை ஆலைகளில் எஞ்சும் கழிவில் இருந்தே எரிசாராயம் தயாரிக்கப்படுகிறது. இந்த கழிவுக்கு மொலாசஸ் என்னும் பெயரும் இருக்கிறது. நாம் கழிவு என்றே சொல்லலாம் தப்பில்லை.. ஒரு டன் சர்க்கரை கழிவில் இருந்து 75 லிட்டர் வரையில் எரிசாராயம் தயாரிக்கலாம். மது ஆலைகள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், ராணுவத்திற்கு என இந்த எரிசாராயம் பகிர்ந்தளிக்கப்படும். இந்த தேவைகளுக்குப்போக மீதம் இருக்கும் எரிசாராயம் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதுக்கும் குண்டர் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைப்பது புரியுது. கொஞ்சம் கீழயும் படிச்சிடுங்க..
எம்ஜிஆர் ஆட்சி
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் இந்த எரிசாராயம் சட்ட விரோதமாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்கப்படுகிறது என அப்போதைய எதிர்க்கட்சியான திமுக குற்றம்சாட்டியது. பேப்பரைத் திறந்தால் எரிசாராயம் கடத்தல் தான் ஹாட் நியூஸ் ஆக இருந்தது.
10 லட்சம் லிட்டர்
கேரளாவில் வெளியாகும் மலையாள மனோரமா, மாத்ருபூமி போன்ற பத்திரிக்கைகள் தமிழக அரசும் கேரள அரசும் இந்த எரிசாராய ஊழலில் ஈடுபடுகிறது என பகிரங்கமாகவே எழுதின. இப்படி எரிசாராய மேட்டர் எக்குத்தப்பாக எரிந்துகொண்டிருந்த நேரத்தில் சென்னை சேம்பர் ஆஃப் காமெர்ஸ் விழாவில் பேசிய அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், “10 லட்சம் லிட்டர் எடுத்திட்டு போக சொன்னேன்.. 15 லட்சமாக எடுத்திட்டு போய்ட்டாங்க” எனப் பேசினார்.
கருணாநிதி முரசொலி
அடுத்தாள் திமுகவின் பத்திரிக்கையான முரசொலியில் எம்ஜிஆருக்கு தெரிந்தே இந்த சாராய ஊழல் நடைபெறுகிறது என்பதற்கு அவரே சாட்சி சொல்லியிருக்கிறார் எனப் பொருள்படும்படி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதினார்..
வைகோ ஆவேசம்
எரிசாராய ஊழல் குறித்து மத்திய அரசு விசாரணை கமிட்டி ஒன்றினை அமைக்க வேண்டும் என திமுக, பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதியது. பட்டி தொட்டியெங்கும் மேடைகளில் எரிசாராயம் குறித்து திமுகவினர் பேச அதற்கெல்லாம் உச்சமாக 1981 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய வைகோ எரிசாராய விஷயத்தில் எம்ஜிஆர் குற்றமற்றவர் என்றால் ஏன் விசாரணை கமிஷனை கண்டு அஞ்ச வேண்டும் என காட்டமாக உரை நிகழ்த்தினார்.
விசாரணை கமிஷன்
இது அன்றைய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து எரிசாராய விஷயம் விவகாரமாகவே ஓய்வுபெற்ற நீதிபதி கைலாசம் தலைமையில் விசாரணை கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நீதிபதி சதாசிவம் இந்தக் கமிட்டிக்கு தலைமை வகித்தார். சிக்கல் சற்று ஓய்ந்தாலும் சட்ட விரோதமாக மது தயாரிப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடவே மது கடத்தலும். மதுவினால் ஒருபக்கம் பிரச்சினை என்றால் மறுபக்கம் தமிழகத்தில் வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்தன.
குண்டர் சட்டம்
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும். அதுவும் உடனடியாக. யோசித்தார் எம்ஜிஆர். சட்டத்துறை அதிகாரிகள், அரசின் மூத்த வழக்கறிஞர் ஆகியோரைக்கொண்டு ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடந்தது. பிறந்ததது குண்டர் சட்டம். அதன்படி, சட்ட விரோதமாக மதுவைத் தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற தவறான காரியங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட காரியங்களில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது அதற்கு துணைபுரியும் நபர்களுக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும்.
2006 திருட்டு சிடி
2006 ஆம் ஆண்டு திருட்டு சிடி சமாச்சாரம் சூடுபிடித்த போது திருட்டு சிடி தயாரித்தல் , விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டம் போடவேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்தனர். அது முதல் திருட்டு சிடி ஆசாமிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என உத்தரவிட்டது தமிழக அரசு.
மற்ற செய்திகள்
"10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்படி அமையும்?"- உறுதியாகச் சொல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை.. முதல்வர் உத்தரவு..!
- தமிழகத்தில் நாளை முதல் எதற்கெல்லாம் தடை..? எதற்கெல்லாம் அனுமதி..? முழுவிபரம்..!
- திரைப்படங்களை மிஞ்சும் அரசு ஆவணப்படம் - திருநெல்வேலி பூர்வகுடிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு வெளியீடு
- யார்.. யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு புதிய உத்தரவு.. முழு விவரம்
- ஒன்றல்ல.. இரண்டு.. தமிழக அரசு ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியான’ அறிவிப்பு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
- TNPSC வெளியிட்டது புதிய பாடத்திட்டமே கிடையாது!- குரூப் தேர்வு எழுதுவோருக்கு புது அறிவிப்பு
- விவசாய மின் இணைப்பு... யாருக்கெல்லாம் உடனே கிடைக்கும்... தமிழ்நாடு மின் வாரியம் தகவல்
- மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தேன்.. சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் கண்ணீர்
- 'ஜெயலலிதா ஆவி உடன் பேசி வருகிறேன்..!'- பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்
- கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சிறப்புகள் விவரம்!