தமிழ்நாட்டில் 'கொரோனா' பாதிப்பு 9 ஆக உயர்வு... ஈரோட்டை 'தனிமைப்படுத்தியதன்' காரணம் இதுதான்... அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,'' கலிஃபோர்னியாவில் இருந்து சென்னை திரும்பிய 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துபாயில் இருந்து திரும்பிய 43 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஈரோடு மாவட்டத்தினை தனிமைப்படுத்திய காரணத்தையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார். அதில், '' தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வந்த இரண்டு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. (இவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அல்ல) அவர்கள் தற்போது பெருந்துறை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அதனால் தான் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது,'' என விளக்கமளித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்