'கொரோனா இரண்டாவது அலை'... 'இளைஞர்களை குறிவைத்து தாக்குவது ஏன்'?... ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் இளைஞர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், ''கொரோனா இரண்டாவது அலையில் ஏன் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? ஆக்சிஜன் தேவை ஏன் அதிகமாக உள்ளது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

உதாரணத்துக்கு நாம் கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். அங்கே இளைஞர்களும் பொதுமக்களும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள் லேசான கொரோனா அறிகுறி தென்படும்போதே உடனடியாகப் பரிசோதனை மையத்துக்குச் சென்று சோதித்து விடுகின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர்.

இதனால் பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் குறைவாக உள்ளது. அந்த விழிப்புணர்வுதான் எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது. கொரோனா நோய் அறிகுறி வரும்போதே மக்கள் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். இதனால்தான் கேரள மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சதவீதம் குறைவாக உள்ளது.

இங்கு இளைஞர்களைப் பொறுத்தவரைத் தொற்று அதிகமாவதற்குக் காரணம் தமக்கெல்லாம் கொரோனா ஏற்படாது என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான். அறிகுறி தெரிந்ததும் பரிசோதனை செய்துகொள்ளாதது அவர்களின் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. எனினும் அறிவியல்பூர்வமான காரணத்தை ஐசிஎம்ஆர் தனியாக ஆய்வு செய்து தெரிவிக்கும்.'' என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்