'நான் அப்படியே அழுதுட்டேன் சார்'... 'என்னா மனுஷன் யா அவரு'... 'விவேக் செய்த உதவி'... 'கண்ணீர் மல்கப் பகிர்ந்த குமரிமுத்து'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி தனது நகைச்சுவை மூலம் பல சமுதாய கருத்துக்களைப் பரப்பிய விவேக், இந்த சமூகத்தின் மீதும், சுற்று சூழல் மீதும் தீராத அக்கறை கொண்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில் பலரும் விவேக் பேசிய பேச்சுகள், சமூகம் சார்ந்த அவரது நகைச்சுவை பேச்சுக்கள் என பலவற்றை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் குமரிமுத்துவின் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் குமரிமுத்து  கடந்த 2016-ம் ஆண்டு காலமாகிவிட்டாலும், அவருடைய பழைய பேட்டியில் தனது மகள் திருமணத்தின் போது விவேக் செய்த உதவி குறித்து கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

குமரிமுத்துவின் இந்த வீடியோ பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் குமரிமுத்து கூறியிருப்பதாவது: "நான் துணிந்து சொல்வேன், எந்தவொரு நகைச்சுவை நடிகர் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. இதை நடிகர் செந்திலிடம் கூட தெரிவித்துள்ளேன். எனது கடைசி மகள் திருமணத்துக்கு கையில் பணமில்லை. தம்பி விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு நாடகத்துக்கு அழைக்கிறார்கள்.

நான் சென்றால் என் பெண் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றேன். எனக்கு என்ன கிடைக்கும் என்றார். உடனே 2 லட்ச ரூபாய் வாங்கி தருகிறேன் என்றேன். சரி அண்ணா, நான் வருகிறேன் என்றார். நாடகம் எல்லாம் முடிந்தவுடன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். விவேக் சார் அறையைக் காட்டுங்கள் என்றார்கள், உடனே அழைத்துச் சென்றேன்.

அப்போது நடந்த சம்பவத்தால், என் வாழ்க்கையில் சந்தோஷத்தில் அழுதது அன்று தான். விவேக்கின் சம்பளமான 2 லட்ச ரூபாயை அவருடைய கையில் கொடுக்கிறார்கள். அதை அப்படியே வாங்கி, "அண்ணே.. இந்தாங்க அண்ணே. 2 லட்ச ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். உங்க பொண்ணு கல்யாணத்துக்குக் கஷ்டப்படுகிறேன் என்றீர்களே.

உங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்துவிட்டார்களா. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே" என்றார். அப்போது தன்னை அறியாமல் அழுத குமரி முத்து, என் வாழ்க்கையிலேயே கலைவாணருக்குப் பிறகு அவன் ஒருவன் தான் நடிகன். அவன் தான் மனுஷன்" என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்