'உனக்க சுயரூபம் இப்போ தானே தெரியுது'... 'கல்யாணத்துக்கு நோ சொன்ன பெண் வீட்டார்'... 'ஜாவா' பைக்கில் இளைஞர் செய்த பதைபதைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்திற்கு வரன் தேடுவதற்கு முன்பு, மாப்பிள்ளை குறித்து தீவிரமாக விசாரிக்காவிட்டால் எவ்வளவு பெரிய விபரீதம் நிகழும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

Advertising
Advertising

ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மல்லி காலனி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் யவனம். இவர் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார். யவனத்திற்குத் திருமணம் செய்ய முடிவு செய்த அவரின் பெற்றோர், அவருக்கு வரன் தேடியுள்ளார்கள். அப்போது அவருடைய உறவினரான பவித்திரன் என்பவருக்கு யவனத்தைத் திருமணம் செய்து வைக்கலாம் எனப் பெண்ணின் பெற்றோர் முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து நிச்சயமும் நடைபெற்றது.

இந்நிலையில் மணப்பெண்ணின் பெற்றோருக்கு வந்த தகவல் ஒன்று அவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. தங்கள் பெண்ணிற்கு நிச்சயம் செய்த பவித்திரனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆன தகவல் அவர்களுக்குத் தெரிந்தது. கேட்டதிலும் ஒரு நல்லது என, இப்போதாவது இந்த விஷயம் தெரிய வந்ததே என யவனத்தின் பெற்றோர் சற்று நிம்மதி அடைந்து, உடனே திருமணத்தை நிறுத்தியுள்ளார்கள். இதனை அறிந்து ஆத்திரமடைந்த பவித்திரன், திருமணம் நடந்தே ஆக வேண்டும் என மணப்பெண் யவனத்தின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.

ஆனால் உன்னுடைய சுயரூபம் இப்போது தான் தெரிந்தது, இதற்கு மேலும் எங்களுடைய பெண்ணை உனக்குத் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என, யவனத்தின் பெற்றோர் உறுதியாகக் கூறிவிட்டார்கள். இதனால் கடும் கோபமுற்ற பவித்திரன், நேற்று தனது உறவினர்கள் 5 பேருடன் மல்லி கிராமத்தில் உள்ள யவனத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டிலிருந்த தாய், சகோதரி உள்ளிட்டோரைத் தாக்கிவிட்டு, மணப்பெண் யவனத்தை மட்டும் தர தரவென இழுத்துக் கொண்டு வந்து, தன்னுடைய ஜாவா பைக்கில் நடுவில் அமர வைத்துக் கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

இந்தநிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், யவனம் கீழே குதித்ததில் அவரது இடது கால் மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அந்த கும்பல்,யவனம் வலியில் துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், மலையடிப்பட்டி கிராமத்திற்கு அழைத்து வந்து உறவினர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதற்குள் யவனத்தின் தந்தை நடந்த சம்பவம் குறித்துக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

உடனே ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண்ணை டிராக் செய்த போலீசார், அது மலையடிப்பட்டி பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர். அங்கு அதிரடியாகச் சென்ற காவல்துறையினர் உறவினர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யவனத்தைப் பத்திரமாக மீட்டு, காயங்களுடன் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். கடத்தலில் ஈடுபட்ட பவித்திரன் ,வெங்கடேசன் உள்ளிட்ட 5 பேர் கும்பலைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தன்னுடைய சுயரூபம் தெரிந்ததால் பெண் வீட்டார் கல்யாணத்தை நிறுத்திய நிலையில், அந்த பெண்ணையே துடிக்கத் துடிக்க கடத்திய இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்