'கட்டிலுக்கு கீழ...' 'தரைக்கு அடியில புதைஞ்சு இருந்த லாக்கர்...' 'பல நாள் ப்ளான் போட்டு உள்ள இறங்கிருக்காங்க...' - உச்சக்கட்ட ஷாக்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

டாக்டர் ராம சேதுவும், இவரது மனைவி லட்சுமியும் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று கொஞ்சம் நாள் தங்கிவிட்டு ஊர் திரும்புவதுண்டு.

அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள இவரது நண்பரிடம் தனது வீட்டு சாவியை கொடுத்து அவ்வப்போது வீட்டினை வந்து கவனித்துக் கொள்ளுமாறு கூறி, இருவரும் பெங்களூருக்கு சென்று விட்டனர்.

அவரது நண்பர் வாரத்திற்கு ஒரு முறை மருத்துவர் வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கும்,  மரங்களுக்கும் தண்ணீர் ஊத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று (30-09-2020) மருத்துவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் பெங்களூரில் உள்ள தனது நண்பர் டாக்டர் ராமசேதுவை தொடர்புக்கொண்டு விஷயத்தை கூறியுள்ளார்.

அதன்பிறகு உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அளித்த புகாரினையடுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.

ராமசேது அடிக்கடி வெளியூர் செல்வதால், பல நாட்கள் அவர்  வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் எந்தவித பயமுமின்றி  மிகவும் துணிவோடு  அந்த வீட்டில் புகுந்து கொள்ளை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் உள்ளே நுழைந்து இரண்டு அறைகளில் இருந்த பீரோக்களின் பூட்டை உடைத்து திறந்துள்ளனர்.

அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அலங்கோலமாக கலைத்து போட்டுவிட்டு படுக்கை அறையில் இருந்த கட்டிலின் கீழ்ப்பகுதியில் தரையில் புதைக்கப்பட்டு இருந்த லாக்கரை கண்டுபிடித்துள்ளனர். அதனை உடைத்து திறந்துள்ளனர். அதில் இருந்த 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் விசாரணையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் மோப்பநாய் சாய்னாவை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைப்போன நகையின் மதிப்பு 18 லட்சம் என்று கூறப்படுகிறது. கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்