'நான் முதல்வர் கூட போன்ல பேசிட்டேன்'... 'பயப்பட வேண்டாம்'... 'இதெல்லாம் திமுக ஆதரவு ஊடகங்கள் செய்கிற வேலை'... ராமதாஸ் காட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். அதை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுவதை விஷமப் பிரச்சாரமாகவே பாமக பார்க்கிறது. வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்சினை அல்ல. அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும்.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்குக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இடப்பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக வன்னியர் சங்கமும், பாமகவும் மேற்கொண்டு வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை நடத்தப்பட்ட அறப்போராட்டங்களின் பயனாகவும் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் கடந்த மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அதற்குத் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, வன்னியர்கள் 10.50% இட ஒதுக்கீட்டுச் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம் தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம், அதற்கு மாற்றாக மற்றொரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை நீடிக்கும். இது தான் நடைமுறையாகும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று முன் நான் தொலைப்பேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார்.

ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்திகளுக்கும் நாம் முக்கியத்துவம்  அளிக்க வேண்டாம். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, வன்னியர்களின் மக்கள்தொகை 15 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது உறுதி செய்யப்படும்.

அதனடிப்படையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்தி புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதை பாமக உறுதி செய்யும். இதுவே எனது உறுதியான நிலைப்பாடு, என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்