100-க்கும் மேற்பட்ட 'சொந்த' வீடுகள்... கட்டுக்கட்டாக கிடைத்த 'பணம்'... மிரண்டு போன போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கட்டுக்கட்டாக கிடைத்த பணத்தை பார்த்து சோதனை செய்த போலீசார் மிரண்டு போய் இருக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர்மீது சாரயம் விற்பது, கஞ்சா விற்பனை உட்பட 35-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்மீது 10-க்கும் மேற்பட்ட முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. எனினும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து 4-5 மாதங்களிலேயே வெளியில் வந்து விடுவாராம். தொடர்ந்து அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வாணியம்பாடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அவர் வீட்டை சுற்றிவளைத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 20 லட்சம் பணம் மற்றும் 21 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.  இந்த சோதனையின்போது மகேஸ்வரி குடும்பத்தினர் போலீசாரை தாக்கிவிட்டு  தப்பிச்செல்ல முயற்சி செய்துள்ளனர். இதில் சூர்யா என்ற பெண் காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

இந்த களேபரத்தில் மகேஸ்வரி கணவர்  மற்றும் அவரது மூத்த மகன் தப்பித்து ஓடி விட்டனர். தொடர்ந்து மகேஸ்வரி, அவரின் மருமகள் காவியா, இளைய மகன் தேவேந்திரன், மகேஸ்வரின் அக்கா மகள் உஷா உட்பட மொத்தம் 7 பேரை பிடித்துக் கைதுசெய்தனர். இவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் வேலூரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மகேஸ்வரி உட்பட மூன்று பெண்களை வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் தேவேந்திரனை வாணியம்பாடி கிளைச் சிறையிலும் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார், '' மகேஸ்வரி சட்ட விரோதமாகப் போதை பொருள்களை விற்பனை செய்து பெருமளவு பணம் சம்பாதித்துள்ளார். அதன் மூலம் அசையா சொத்துகளையும் வாங்கிக் குவித்துள்ளார். அவரின் சொத்துகள் அனைத்தையும் அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சார் பதிவாளர் அலுவலகம் மூலம் சொத்துகள் கணக்கிடும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 40 சொத்துகளுக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன,'' என்றார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கவிதா வாணியம்பாடி பகுதியில் மட்டும் மகேஸ்வரிக்கு 100-க்கும் மேற்பட்ட சொந்த வீடுகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். அவரின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்