'சொத்துக்காக' தந்தையின் முகத்தில் 'எட்டி' உதைத்த மகன்... முகத்தில் கல்லால் அடித்த மற்றொரு மகன்... 'நீதி கேட்டு' முதியவர் செய்த காரியம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிதம்பரம் அருகே வீட்டை எழுதிக் கேட்டு வயதான தந்தையை மகன்கள் இருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ் அனுப்பம்பட்டைச் சேர்ந்த 75 வயதான கோவிந்தராஜு என்பவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் முதல் 3 மகன்கள் தந்தையை கண்டுகொள்ளாத நிலையில், கடைசி மகனான நித்தியானந்தம் வெளிநாட்டில் வேலை செய்தவாறு தந்தைக்கு பணம் அனுப்பி கவனித்து வந்திருக்கிறார்.

மகன் அனுப்பிய பணத்தில் வீடு ஒன்றை கட்டிய முதியவர் கோவிந்தராஜு, அந்த வீட்டை நித்யானந்தம் பெயருக்கே எழுதி வைத்து தனது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நித்யானந்தம் வீட்டை முதல் மகனான சுகுமாரும், 3வது மகனான ரெங்கநாதனும் அபகரித்துக்கொண்டு தன்னையும் நித்தியானந்தத்தின் மனைவி, பிள்ளைகளையும் அடித்து விரட்டிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய கோவிந்தராஜ், தனியாக வந்து கிள்ளை ரயில்நிலைய பிளாட்பாரத்தில் தஞ்சமடைந்திருக்கிறார். குடிபோதையில் அங்கு வந்த மகன்கள் இருவரும் வீட்டை முறைப்படி தங்கள் பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறி அவரை கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகளை ரயில்நிலையத்திலிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். 75 வயது முதியவர் என்றும் பாராமல் அவரது முகத்தில் ஒரு மகன் எட்டி உதைப்பதும் மற்றொருவன் கல்லால் அவரை தாக்குவதும் அதில் பதிவாகியுள்ளது.

மகன்களின் இந்த தாக்குதல் குறித்து கிள்ளை காவல் நிலையத்தில் கோவிந்தராஜு புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வந்த அவர் தன் மேல் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். 

அவரை மீட்ட போலீசார், மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனுவை அளித்தனர்.  சொத்துக்காக பெற்ற தந்தை என்றும் பாராமல், அவரை கொடூரமாகத் தாக்கிய இரக்கமற்ற அரக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BRUTALLY ATTACK, FATHER ATTACKED, PROPERTY, CADALUR, CHIDAMPARAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்