'True Caller-ல் இருந்த அந்த பெயர்'... 'இம்மி பிசகாமல் அளந்து விட்ட கம்பி கட்டுற கதை'... நடிகர் ஆர்யா வழக்கில் தலைசுற்ற வைக்கும் ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் பண மோசடி செய்தார் என ஈழப்பெண் கொடுத்த புகாரில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பெண் விட்ஜா. இவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர்  குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக விட்ஜா கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகார் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், நடிகர் ஆர்யா என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 70 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். நடிகர் ஆர்யா பணக்கஷ்டத்தில் இருந்ததாக தன்னிடம் தெரிவித்து  70லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாகப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறிய வாக்குறுதியை நம்பி அந்த பணத்தை கொடுத்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. ஆர்யாவுக்குப் பணம் அனுப்பியதாகக் கூறப்பட்ட வங்கிக் கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம்  போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவரது செல்போனை வாங்கி சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் விட்ஜாவுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், அவருக்கும் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.

இதையடுத்து இவ்வளவு பக்காவாக பிளான் போட்டு அதுவும் பிரபல நடிகரின் பெயரில் கைவரிசை காட்டிய நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி திருப்பமாக, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது அர்மான், மற்றும் உசைனி ஆகியோர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது நடிகர் ஆர்யாவின் பெயரில் பேஸ்புக்கில் போலியாகக் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதில் மெசேஜ் அனுப்பும் பெண்களிடம் ஆசைவார்த்தைக்கூறி பழகி பணம் பறித்து வந்துள்ளனர். அந்தவகையில் ஜெர்மனியை சேர்ந்த விட்ஜாவிடம் ஆர்யா போலப் பேசி பழகியதோடு, தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாகக் கூறி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெஸ்டர் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலமாகப் பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி இளைஞர்கள் பயன்படுத்திய செல்போனின் எண்ணை ட்ரூ காலரில் பரிசோதித்தால் நடிகர் ஆர்யா என்று பெயர் வரும் அளவிற்கு முன் ஏற்பாடுகளைச் செய்திருந்ததால் அந்த பெண்ணும் தன்னுடன் சாட்டிங் செய்வது உண்மையிலேயே நடிகர் ஆர்யா தான் என்று முழுமையாக நம்பியுள்ளார்.

இதற்கு எல்லாம் உச்சமாக நடிகை ஆயிஷாவை விவாகரத்து செய்துவிட்டு உங்களைத் திருமணம் செய்து கொள்வதாக வாட்ஸ் அப்பில் கதை எல்லாம் அளந்து விட்டுள்ளார்கள் அந்த மோசடி இளைஞர்கள். இதற்கிடையே மோசடி இளைஞர்கள் இன்னும் எத்தனை பேரிடம் ஆர்யாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் பறித்துள்ளனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் ஆர்யாவுக்கும் இந்த இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் ஆர்யா தொடர்ந்து அமைதியாக இருந்து வந்தார். ஆனால் இதில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல் சமூகவலைத்தளங்கள் முதல் பல இடங்களில் ஆர்யாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்