‘எனக்கும் சோகமாகதான் இருக்கு’!.. சசிகலாவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன..? டிடிவி தினகரன் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கியதற்கான காரணத்தை டிடிவி தினகரன் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ள நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இந்த நிலையில், திடீரென தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில், ‘நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய, திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும். என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்’ என அவர் அறிக்கை வெளியிட்டார்.

சசிகலாவின் இந்த திடீர் முடிவுக்கான காரணம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கிய டிடிவி தினகரன், ‘அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டது எனக்கு சோகமாக உள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலே அப்படி சொன்னார். தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளார். தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

அரசியலைவிட்டு ஒதுங்கினால் உடனே பின்னடைவு என்றெல்லாம் சொல்லமுடியாது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என சசிகலா தனது கருத்தை கூறியுள்ளார். எனது சித்தி என்பதற்காக சசிகலா மீது என் கருத்தை திணிக்க முடியாது. அவரின் மனசாட்சியாக நான் பேசமாட்டேன். சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா போராடிக்கொண்டிருக்கிறார்’ என டிடிவி தினகரன் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்