இதுதான் பெரியாருக்கு காட்டும் மரியாதையா..? ‘காவி சாயம், காலணி மாலை’.. கொதித்த தலைவர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் மர்மநபர்கள் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியார் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலை மீது மர்மநபர்கள் சிலர் காவி சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இன்று அதிகாலை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காலணி மாலையை அகற்றி, சிலை மீதிருந்த காவி சாயத்தை துடைத்தனர்.

இந்த சம்பவத்தால் திக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்