‘அம்மாவை கவனிக்க யாருமில்லை’.. 120 கிமீ சைக்கிளை மிதித்த மகன்.. உருகவைத்த ‘தாய்பாசம்’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடல்நலம் குன்றிய தாயை கவனிப்பதற்காக சுமார் 120 கிமீ சைக்கிளில் பயணம் செய்த மகனின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள எஸ்.ஆர்.பட்டணத்தை சேர்ந்தவர் கருப்பையா (50). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிழைப்புக்காக மனைவி, பிள்ளைகள் மற்றும் தனது தாய் வள்ளியம்மாளுடன் (70) திருச்சியில் குடியேறினார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய் வள்ளியம்மாள் பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார். திருச்சியில் உள்ள வீடு சிறியது என்பதால் தாயை கவனிக்கும் பொருட்டு மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு காரைக்குடிக்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரில் தாயுடன் குடியேறினார்.

அங்கு ஒரு அச்சகத்தில் வேலை பார்த்துக்கொண்டே தாய்க்கு பணிவிடை செய்து வந்தார். வாரம் ஒருமுறை திருச்சி சென்று மனைவி, பிள்ளைகளை பார்த்து வந்தார். இந்த நிலையில் கருப்பையா திருச்சியில் இருக்கும் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வாகன போக்குவரத்தும் இல்லாததால் அங்கிருந்து காரைக்குடிக்கு வர முடியாமல் தவித்துள்ளார். காரைக்குடியில் கவனிப்பாரின்றி தாய் வள்ளியம்மாள் தினமும் கஷ்டப்படுவதாக அக்கம்பக்கத்தினர் கருப்பையாவிடன் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாயை காக்கும் பொருட்டு திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு சைக்கிளில் செல்ல கருப்பையா முடிவெடுத்து காலை 7 மணியளவில் புறப்பட்டுள்ளார். சுமார் 120 கிலோமீட்டர் உள்ள தொலைவை மதியத்துக்குள் சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். ஆனால் புதுக்கோட்டை அருகே வந்தபோது சைக்களில் டயர் திடீரென பஞ்சர் ஆகியுள்ளது. அருகில் கடைகள் ஏதும் இல்லாததால், அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து ஒரு கிராமத்தில் உள்ள சைக்கிள் கடைக்காரிடம் பஞ்சர் பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்து தாய்க்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். தாயை காக்கும் பொருட்டு சுமார் 120 கிமீ சைக்கிளில் பயணித்த மகனின் தாய்பாசம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்