“மனிதாபிமானமே இல்லாம... புயல் நேரத்துலயா இப்படி பண்ணுவீங்க!”... நிவருக்கு பயந்து உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்ற நேரம் பார்த்து.. வீட்டை குறிவைத்து மர்ம கும்பல் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பட்டுக்கோட்டை அருகே நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சத்தால் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டில் தாயும், மகளும் தூங்கச் சென்ற நிலையில், மர்ம நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சரஸ்வதி(40). மகள் பாக்கியலட்சுமி (19). சரஸ்வதியும், பாக்கியலட்சுமியும் தொக்காலிக்காட்டில், தென்னந்தோப்பிற்கு நடுவே கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். முன்னதாக 2018-ல் வீசிய கஜா புயல் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் மீதும் மரங்கள் விழுந்து ஏராளமான வீடுகள் சேதமடைந்ததன.

இந்நிலையில் நிவர் புயல் எச்சரிக்கை தற்போது விடுக்கப் பட்டது. நிவர் புயல் அச்சத்திலும், பாதுகாப்பு கருதியும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமியும் தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று  முன்தினம் இரவு உறங்கச் சென்று விட்டனர். பின்னர், நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்ததால், அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, வீட்டிற்குள் பார்த்தபோது பீரோவில் இருந்து 2 பவுன் நகை மற்றும் ரூ.10,000 பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அம்பலமாகியுள்ளது.

இதுபற்றி பேசிய சரஸ்வதி, “புயலால் தென்னை மரங்கள் வீட்டின் மேல் விழுந்து விடும் என்கிற பயத்தால் உறவினர் வீட்டுக்கு தூங்க போனோம். ஆனால் இந்த புயல் நேரத்திலும் அத்தியாவசிய தேவைக்கு வைத்திருந்த பணத்தையும், வீட்டிலிருந்த நகையையும் மர்ம நபர்கள் திருடிக் கொண்டுசென்றுவிட்டனர்” என்று புலம்பியதுடன், அதிராம்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்