“எதுக்காக அடுத்தவங்க பரீட்சை அட்டைய வாங்கிட்டு போற?”.. மனமுடைந்த பள்ளி மாணவி எடுத்த சோக முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ளது மூங்கில்பாடி. இங்குள்ள பழைய காலனியைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் 14வயது மகள் அப்பகுதியில் உள்ள எலவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இம்மாணவி கடந்த 14-ஆம் தேதி பள்ளித் தேர்வினை எழுதுவதற்காக சென்றபோது, சக மாணவர் ஒருவரிடம் தேர்வட்டையை (Exam Pad) வாங்கிச் சென்றதாகவும், மாணவியின் இந்த செயலை அடுத்து, மாணவியின் தாய் சுமதி,  ‘எதுக்காக அடுத்தவங்க கிட்ட தேர்வட்டையை வாங்கிட்டு போற?’ என்று கேட்டு கண்டித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், மனமுடைந்த மாணவி தனது பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 15-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ந்த, மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் மாயமானதாக சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

பின்னர் நேற்று காலை மூங்கில்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து, தீயணைப்பு வீரர்களால் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். அதன் பின் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மாணவியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்