‘பெட்ரோல் மீதான ரூ.3 வரிக்குறைப்பு’.. எப்போது முதல் அமல்..? நிதித்துறை செயலாளர் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 ரூபாய் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது இருக்கையில் கணினிகள் பொருத்தப்பட்டிருந்தன.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை அதிகரித்து, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் பெருமளவில் பயன் பெறுவதுதான் பெட்ரோல் விலை உயர்விற்கு காரணம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் பெட்ரோல் விலையைக் குறைப்பதால் ரூ. 1,160 கோடி இழப்பு ஏற்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், எங்கெங்கு தேவையோ அங்கு கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வருவாயை கூட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
டீசல் வாகனங்கள் குறைவான மக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை என்றும் கூறினார். இந்த பெட்ரோல் மீதான வரி குறைப்பு இன்று (13.08.2021) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்